சென்னை: உணவின்றி தவித்த வட மாநில தொழிலாளர் பட்டினிச்சாவா? சிகிச்சை பலனின்றி மரணம்; நடந்தது என்ன?

தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிடாமல் இருந்த மேற்கு வங்க தொழிலாளர் ஒருவர் சென்னை ரயில் நிலையத்தில் மயங்கி விழுந்துள்ளார். இவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கிட்டதட்ட 15 நாட்களுக்குப் பின்னர், மருத்துவமனையில் இன்று அவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த மாதம், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் வேலைத் தேடி சென்னை வந்துள்ளனர். ஆரம்பத்தில் பொன்னேரியில் வேலை செய்த இவர்களுக்கு, பின்னர் வேலை எதுவும் கிடைக்கவில்லை. சுத்தமாகப் பணமும் கையில் இல்லை.

சமர்கான்

இதனால் சாப்பிடுவதற்குப் பணம் இல்லாமல், திரும்ப அவர்கள் ஊருக்கே சென்றுவிடலாம் எனக் கடந்த 16-ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். அதற்கு முன்பாக மூன்று நாட்கள் பணம் இல்லாமல், சாப்பிடாமல் இருந்துள்ளனர். இதில் 5 பேர் பசியினால் ரயில் நிலையத்திலேயே மயக்கம் போட்டு விழுந்துள்ளனர்.

இவர்களை மீட்டு ரயில் நிலைய போலீசார் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. 5 பேரில் மூவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, குணமாகி மீண்டும் மேற்கு வங்காளத்திற்கே அனுப்பப்பட்ட உள்ளனர். இரண்டு பேருக்குத் தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு சமர்கான் என்பவர் உள் உறுப்புகள் செயலிழப்புகளால் மரணமடைந்துள்ளார்.

இவரது உடலை மேற்கு வங்கத்திற்கு எடுத்த செல்ல உதவும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி இஸ்ரேல் ஜெபசிங் பேசும்போது, “இவர்களை மாதிரி பல பேர் வேலைத் தேடி வட மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு வருகின்றனர். இந்த மாதிரி அசம்பாவிதம் நேரும்பட்சத்தில் இவர்களுக்கு உதவுகிற படி அரசு எதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.