“வாய்ச்சொல் வீரராக இல்லாமல், பழனியில் சேவை பண்ணுங்க” – ஜி.மோகன் வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம்!

பழனி கோயில் பிரசாதமான பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலக்கப்பட்டதாகப் பேசியதால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார் இயக்குநர் ஜி.மோகன்.

கடந்த இரண்டு வாரங்களாக திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்குக் கொழுப்பு, மீன் எண்ணெய் போன்றவைப் பயன்படுத்தப்பட்டதாக வெளியான ஆய்வின் முடிவுகள் நாடெங்கும் பெரும் பேசுபொருளாகி வருகிறது. இவ்வேளையில் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஜி.மோகன், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பழனி கோயில் பிரசாதமான பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலக்கப்பட்டதாகப் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுத்த திருச்சி மாவட்ட காவல்துறை, இந்து மதத்தினரையும், இந்து மக்களையும் புண்படுத்தும் விதமாகப் பேசியதாகக் கூறி இயக்குநர் ஜி.மோகனை செப்டம்பர் 25ம் தேதி காலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.

ஜி.மோகன்

பிறகு அடுத்த நாளே பா.ம.க., வழக்கறிஞர் பாலு, ஜி.மோகனுக்கு ஜாமீன் பெற்றுத் தந்தார். இதையடுத்து, “கைதின்போது எந்தவிதமான அடிப்படை உரிமைகளும் எனக்கு வழங்கப்படவில்லை. இது ஒரு மனித உரிமை மீறல். எனது கேள்விகளுக்குப் பதில் இல்லை, எனக்குச் சாதகமாக எதுவும் நடக்கவில்லை.” என்று காவல்துறை மீது குற்றம் சாட்டியிருந்தார் ஜி.மோகன்.

மேலும், “ஆந்திர முதலமைச்சர் அவர்கள் திருப்பதி லட்டு குறித்த குற்றச்சாட்டுகளைச் சொன்னார். அந்த தைரியத்தில்தான் இங்கு, தமிழ்நாட்டில் பஞ்சாமிர்தம் குறித்து நான் செவிவழியாகக் கேள்விப்பட்ட செய்தியின் அடிப்படையில் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தேன்.” என்று கூறியிருந்தார். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கலும் செய்திருந்தார்.

இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 30) உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் பல்வேறு நிபந்தனைகளுடன் ஜி.மோகனுக்கு முன்ஜாமீன் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற நிபந்தனைகள்:

– பழனி பஞ்சாமிர்தம் பற்றி அவதூறு பரப்பிய விவகாரத்தில் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி மன்னிப்பு கேட்க வேண்டும்.

– மனுதாரர் பழனி பஞ்சாமிர்தம் குறித்து கருத்து தெரிவித்த சம்பந்தப்பட்ட சமூக வலைதளத்தில் மன்னிப்பு கூற வேண்டும். பிரபல தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் தமிழகம் முழுவதும் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்டு விளம்பரமாக வெளியிட வேண்டும்

-பழனி காவல் நிலையத்தில் தினந்தோறும் 3 வாரங்களுக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.

மதுரை உயர் நீதிமன்றக் கிளை

– மனுதாரர் வாய்ச்சொல் வீரராக இல்லாமல் எந்தவொரு தகவலையும் தெரிவிக்கும் முன் உறுதிப்படுத்தாமல் அதைக் கூறக் கூடாது.

– திரைப்பட இயக்குநர் மோகன் ஜி, பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்கும் இடத்துக்குச் சென்று 10 நாள்கள் சேவை செய்யும் நோக்கில் பணியாற்றலாம். உண்மையிலேயே பழனி கோயில் மீது அக்கறை இருந்தால் அங்கு சென்று தூய்மை பணி மேற்கொள்ளலாம்.

என நிபந்தனைகளை விதித்து, முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார் நீதிபதி.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX