49 ATM-களில் கைவரிசை.. தமிழ்நாடு – கேரளா எல்லைகளை அலறவிட்ட கொள்ளையர்கள்… சிக்கியது எப்படி?

2 மணி நேரத்துக்குள் 3 ATM-களில் கொள்ளை

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் 2 மணி நேரத்துக்குள் மூன்று ஏ.டி.எம்களில் கொள்ளையடித்து விட்டு காரில் புறப்பட்டது ஒரு கும்பல். கேரளா எல்லையை கடப்பதற்குள், அந்தக் காரை கன்டெய்னரில் ஏற்றி புயல் வேகத்தில் பறந்தனர். தமிழ்நாட்டுக்குள் வரும் வரை அவர்களின் திட்டம் கச்சிதமாகவே நடந்தது. ஆனால், சினிமா காட்சிகளை விஞ்சும் அளவுக்கு நாமக்கல் எல்லையில் கன்டெய்னரை சேஸ் செய்து, துப்பாக்கி சூடு நடத்தி திருட்டு கும்பலை பிடித்து அதிரடி காட்டியுள்ளது தமிழ்நாடு போலீஸ்.

ஏ.டி.எம் கொள்ளை

இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் பேசினோம். “கடந்த செப்டம்பர் 27ம் தேதி இரவு, கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் எஸ்.பி.ஐ வங்கியின் 3 ஏ.டி.எம்களில் மர்ம நபர்கள் முகமூடியுடன் சென்று கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டனர். பிறகு அங்கிருந்து க்ரெட்டா காரில் தப்பித்துள்ளனர். இது தொடர்பாக திருச்சூர் எஸ்.பி இளங்கோ, தமிழ்நாடு காவல்துறைக்கு அலெர்ட் கொடுத்தார். அந்த கொள்ளைக் கும்பல் க்ரெட்டா காரில் தப்பிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் மட்டுமே கைவசம் இருந்தது. வேறு எந்த க்ளூவும் இல்லை.  சிறிது நேரத்தில் சம்பந்தப்பட்ட காரையும் காணவில்லை என்று கூறினர். அதனால் தமிழ்நாடு நோக்கி வரக்கூடிய கன்டெய்னர் லாரிகளை சோதனை செய்தோம்.

கன்டெய்னருக்குள் காரை கடத்தி எஸ்கேப்.. 

சங்ககிரி தேசிய நெடுஞ்சாலையில் சோதனையில் ஈடுபட்டிருந்தோம். அப்போது வடமாநில கன்டெய்னர் லாரி ஒன்று, வாகனத்தை திருப்பிக்கொண்டு வேகமாகச் சென்றனர். சாலையில் சென்ற மற்ற வாகனங்களையும் இடித்து சென்றதால், சந்தேகமடைந்து அதை சேஸ் செய்ய தொடங்கினோம். நாமக்கல் மாவட்டம், தோப்புக்காடு பகுதியில் துப்பாக்கி முனையில் கன்டெய்னர் மடக்கி பிடிக்கப்பட்டது.

கன்டெய்னரை சோதனை செய்தபோது, அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த க்ரெட்டா கார் கண்டறியப்பட்டது.  காருக்குள் இருந்த 5 பேர்,  லாரியின் முன்பக்கம் அமர்ந்துவந்த 2 பேர் என மொத்தம் 7 பேரையும் கைது செய்தோம். அதில் 2 பேர் போலீஸாரை தாக்கிவிட்டு கொள்ளையடித்த பணத்தோடு தப்பியோடினர். இதனால், போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஜமாந்தீன் என்பவர் உயிரிழந்தார். முகமது ஹஸ்ரு என்பவர் காயங்களுடன் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் பிடிபட்ட அனைவருமே ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.” என்றனர்.

பழைய ATM இயந்திரங்களில் பயிற்சி..

நாமக்கல் மாவட்ட எஸ்.பி ராஜேஷ்கண்ணனிடம் பேசினோம். “இந்த கும்பல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும்போது கன்டெய்னர் லாரிகளை பயன்படுத்தி தப்பிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இரும்பு கடைகளில் இருந்து பழைய விலையில் ஏ.டி.எம் இயந்திரங்களை வாங்கி, அதில் எவ்வாறு வெல்டிங் மூலம் உடைத்து பணம் எடுக்கலாம் என்று பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஹரியானா மாநிலத்தில் ஏ.டி.எம் இயந்திரங்களை பொருத்தும் ஏஜென்சியை சேர்ந்த ஒருவர் பயிற்சி அளித்து வருகிறார். எந்த மாநில ஏ.டி.எம்களில் பணம் அதிகம் வைக்கிறார்கள் என்ற தகவலையும் அவர் அளித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட எஸ்.பி ராஜேக்ஷ் கண்ணன்!

மாநில எல்லைகளில் உள்ள SBI – ATM தான் முக்கிய இலக்கு

பெரும்பாலும் மாநில எல்லைகளில் உள்ள SBI – ATM இயந்திரங்களை தான் குறிவைத்துள்ளனர். இதுவரை 49 ஏ.டி.எம் இயந்திரங்களில் திருடியுள்ளனர். கொள்ளையிட வரும்போது, கூகுள் மேப்பில் மாநில எல்லைகளுக்குள் எங்கெல்லாம் சம்பந்தப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் உள்ளது என்பதை தெரிந்துக்கொண்டு, அங்கெல்லாம் திருடியுள்ளனர். இவர்களது தலைவனாக செயல்பட்ட ஜமாந்தீன் தான் என்கவுன்டரில் இறந்துள்ளார்.

இந்த சம்பவத்திற்காக ஹரியானாவில் இருந்து 5 பேர் விமானம் மூலமும், 2 பேர் சென்னையிலிருந்து கன்டெய்னர் எடுத்துக்கொண்டும் வந்துள்ளனர். இவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, ஒடிசா மாநிலங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 15 நாள்களுக்கு முன்பு ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுபட்டது  தெரியவந்துள்ளது.” என்றார்.

3 ATM-களில் அடுத்தடுத்து கொள்ளை

திருச்சூர் எஸ்.பி இளங்கோவிடம் பேசினோம். “கடந்த 2021 ஆம் ஆண்டு கண்ணூரில், இதேபோன்று ஒரே நாளில் 2 மணி நேரத்தில் 3 ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அப்போது சி.சி.டி.வி காட்சிகளை பார்த்தபோது, ஒரு கார் பின்னால், கன்டெய்னர் லாரி செல்வது தெரிந்தது. அதன்பிறகு அந்த கார் எங்கு போனது என்று தெரியவில்லை. அதனால் சம்பந்தப்பட்ட கன்டெய்னரை ஹரியானா போலீஸ் மூலம் டிராக் செய்யும்போது கொள்ளைக் கும்பல் பிடிப்பட்டது.

திருச்சூர் எஸ்.பி இளங்கோ!

தற்போது நடந்த சம்பவத்திலும் கொள்ளைக் கும்பல் இரிஞ்ஞாலக்குடா டு திருச்சூர் சாலையில் உள்ள ஏ.டி.எம்-ல் அதிகாலை 2.10 மணிக்கு புகுந்தது. கண்காணிப்பு கேமராவில் கறுப்பு பெயிண்ட் ஸ்பிரே செய்துவிட்டு, கேஸ் கட்டர் மூலம் ஏ.டி.எம் இயந்திரத்தை பிளந்து 33.09 லட்சம் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

3.07 மணிக்கு   திருச்சூர் ஸ்வராஜ் ரவுண்டானா பகுதி ஏ.டி.எம்மில் 9.89 லட்சத்தை 10 நிமிடங்களில் கொள்ளையடித்துவிட்டு புறப்பட்டுள்ளனர்.

மீண்டும் 3.58 மணிக்கு வடக்காஞ்சேரி சாலையில் உள்ள கோலழி பகுதியில் உள்ள ஏ.டி.எம்மில் 25.84 லட்சம் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். அதிகாலை 2.10 மணி முதல் 3.58 மணிக்குள்ளாக 23.4 கி.மீ தொலைவுக்குள் உள்ள மூன்று ஏ.டி.எம்-களிலும் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். 4.20 மணிக்கு தேசிய நெடுஞ்சாலையில், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை கன்டெய்னருக்குள் ஏற்றியுள்ளனர். பின்னர் அங்கிருந்து தமிழ்நாட்டுக்குச் சென்றனர். அதனால்தான் நாமக்கல் மாவட்ட எஸ்.பியை அலர்ட் செய்தேன்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…