நேற்று காஸா, இன்று லெபனான், நாளை ஈரான்? – நெதன்யாகுவின் அடங்காத போர் வெறியும் தாக்கமும்

கடந்த ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதி இஸ்ரேலிய நகரங்கள் மீது ஹமாஸ் படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் 1,400-க்கு மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளை ஹமாஸ் படைகள் பிடித்துச் சென்றனர். இந்தத் தாக்குதல் நடந்த சில மணி நேரங்களிலேயே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர் தொடங்கிவிட்டதாக அறிவித்தார். பாலஸ்தீனம் மீது அன்றைய தினம் தொடங்கிய இஸ்ரேலின் தாக்குதல் ஏறக்குறைய ஓராண்டு காலம் ஆகியும் ஓய்ந்தபாடில்லை.

இந்த நீண்ட யுத்ததால் கோபமும் விரக்தியும் அடைந்த இஸ்ரேலியர்கள், ஹமாஸால் பிடித்துச் செல்லப்பட்ட பிணைக் கைதிகளை மீட்கக் கோரி லட்சக்கணக்கான அளவில் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். போருக்கு முற்றிப்புள்ளி வைத்து நெதன்யாகு தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற யூதர்களின் ஒருமித்த கோரிக்கையை புறம்தள்ளி தன்னுடைய தனிப்பட்ட இலக்குகளுக்காக இந்த யுத்தத்தை அதன் இரண்டாவது ஆண்டுக்குள் கொண்டு சென்று கொண்டிருக்கிறார் நெதன்யாகு.

கடந்த ஜூலையில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பு 72% இஸ்ரேலியர்கள் நெதன்யாகு பதவி விலகவேண்டும் என்று விரும்புவதாக கூறியது.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் | போர் பதற்றம்

தனக்கு எதிராக பொதுமக்களின் அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொண்டிருக்கும் சூழலில் போர் நிறுத்தத்துக்கான எந்தவொரு ஒப்பந்ததிலும் கையெழுத்திட மறுக்கும் நெதன்யாகு, கடந்த மே மாத இறுதியில் காஸா உடனான அமைதி ஒப்பந்ததுக்கு நான்கு புது நிபந்தனைகளை முன்வைத்தார். அதில் ஒரு நிபந்தனை: காஸா – எகிப்து எல்லைப் பகுதியில் அமைந்துள்ள 14 கி.மீ நீளம் கொண்ட பிலடெல்பி காரிடார் (Philadelphi Corridor) பகுதியில் நிரந்தமான இஸ்ரேல் ராணுவ முகாம்களை ஏற்படுத்துவது.

நாஜி ஹோலோகாஸ்ட் துயர சம்பவங்களுக்குப் பிறகு அதிக யூதர்கள் உயிரிழந்தது அக்டோபர் 7 தாக்குதலில்தான் என்றும், இதற்கு காரணம் மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாடு என்றும் கூறியே இஸ்ரேலிய தேசியவாதிகள், நெதன்யாகுவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இதில் முரண் என்னவென்றால், தன்னுடைய அரசியல் வாழ்க்கை முழுக்க நெதன்யாகு மட்டும்தான் யூதர்களின் ஒரே பாதுகாவலன் என்றும், தன்னால் மட்டுமே யூதர்களையும், இஸ்ரேலையும் காப்பாற்ற முடியும் என்று நிறுவி வந்தவர்.

இத்தனை லட்சம் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தும் சூழலிலும், தன்னுடைய சொந்த இலக்குகளை அடைய நெதன்யாகு எந்த எல்லைக்கும் செல்வார் என்றே தெரிகிறது.

ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு பாலஸ்தீனத்தை கையகப்படுத்தும் நோக்கில் மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவ முகாம்கள் தொடர்ந்து அதிகரித்தன. கடந்த அக்டோபருக்குப் பிறகு இஸ்ரேல் ராணுவம் மேற்குக் கரை பகுதியில் மிகப் பெரிய ஊடுருவலை நடத்தியுள்ளது. இதுவரை காஸாவில் 41,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், மேற்குக் கரையில் 650 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதில் பெரும்பாலோர் பெண்களும் குழந்தைகளும்.

இது பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று நெதன்யாகு வாதிட்டாலும், இந்த நடவடிக்கைகளின் பின்னால் இருக்கும் உச்ச நோக்கம், பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எந்தவொரு எதிர்ப்புக் குழுவை நசுக்குவதுமே என்று தெரிகிறது.

தன்னுடைய ஆட்சியின் பாதுகாப்பு குறைபாடுகளை மறைக்கவே நெதன்யாகு காஸா, மேற்குக் கரை, தற்போது லெபனான் என அடுத்தடுத்து தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாகவும், இந்த தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால் அதுதான் அவரது ஆட்சியின் முடிவாக இருக்கும் என்று உலக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அடுத்த தேர்தலில் வெற்றியடையும் நெதன்யாகுவின் இந்த யுத்த வெறி தீரப் போவதில்லை என்பது மட்டும் உறுதி.

பாலஸ்தீன சூழல் இப்படியென்றால், இன்னொரு புறம் நெதன்யாகுவின் சமீபத்திய நடவடிக்கைகள் மத்திய கிழக்கையே பெரும் பதற்றத்துக்கு ஆளாக்கியிருக்கிறது. செப்.17, 18 தேதிகளில் உலகம் இதுவரை பார்த்திராத ஒரு தாக்குதலை நெதன்யாகு முன்னெடுத்தார். தொழில்நுட்பத்தில் பெரியளவில் மேம்படாத பேஜர்கள், வாக்கி-டாக்கிகளை பயன்படுத்தி லெபனானின் ஹிஸ்புல்லா மீது நடத்திய தாக்குதல் அது. இதில் 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 5,000 பேர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் பெரும்பாலோர் ஹிஸ்புல்லாவுக்கு தொடர்பில்லாத பொதுமக்கள் என்கின்றன லெபனான் ஊடகங்கள்.

ஹிஸ்புல்லா – பேஜர்

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஹிஸ்புல்லாவுக்கு எதிரான யுத்த நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியது. ஏவுகணை, டிரோன் தாக்குதல்கள் மூலம் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதன் இடையே நடந்த விமானப்படை தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் நஸ்ரல்லா பதுங்கியிருந்த சுரங்க வீடு தகர்க்கப்பட்டது. இதில் அவர் உயிரிழந்தார்.

கடந்த 1992-ல் ஹிஸ்புல்லா தலைவராக பதவியேற்ற ஹசன் நஸ்ரல்லா, அந்த இயக்கத்தை அரசியல் அமைப்பாகவும், லெபனானின் துணை ராணுவ படையாகவும் மாற்றியவர். தற்போது ஹிஸ்புல்லாவில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ளனர். அதோடு ஏவுகணைகள், பீரங்கிகள் உள்ளன. 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஹிஸ்புல்லாவை வழிநடத்திய ஹசன் மரணம் அந்த அமைப்புக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. விளைவுகளைப் பற்றி துளியும் கவலையின்றி, லெபனானின் சக்தி வாய்ந்த மனிதரைக் குறிவைத்து தட்டித் தூக்கிய இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைக்குப் பின்னால் உள்ள ஒரே நபர்… நெதன்யாகு.

ஈரான் ரியாக்‌ஷன் என்ன?

ஹிஸ்புல்லா தலைவர் ஹசனின் மரணத்தை அடுத்து, அடுத்து ஈரான் உயர் தலைவரும், மதகுருவுமான அயத்துல்லா அலி காமெனி தலைமையில் தெஹ்ரானில் உயர் நிலைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஈரான் அதிபர் மசூத், மூத்த தளபதிகள் பங்கேற்றனர்.

அந்தக் கூட்டத்தில் காமெனி பேசும்போது, “லெபனான், ஹிஸ்புல்லாவுக்காக உலகம் முழுவதும் வாழும் அனைத்து முஸ்லிம்களும் ஓரணியில் திரள வேண்டும். இஸ்ரேலுக்கு எதிராக போர் தொடுக்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார்.

அதன் தொடர்ச்சியாக, காமெனியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவர் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசும்போது, தனது கைகளில் இரண்டு மேப்-களை வைத்திருந்தார். அவர் காட்டிய வரைபடங்களில் ஒரு சில நாடுகள் ‘சபிக்கப்பட்டவை’ என்றும், சில நாடுகள் ‘ஆசிர்வதிக்கப்பட்டவை’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தன. அந்த மேப்பில், பாலஸ்தீன பகுதியான மேற்கு கரை மற்றும் காஸா ஆகியவை இஸ்ரேலின் பகுதியாக குறிப்பிடப்பட்டிருந்தது கவனிக்கவைத்த ஒன்று. அதேபோல், சிரியாவின் கோலன் ஹைட்ஸ் பிராந்தியம் இஸ்ரேலின் பகுதியாக குறிப்பிடப்பட்டிருந்தது.

நெதன்யாகு பார்வையில் ஈரான், ஈராக், சிரியா மற்றும் ஏமன் நாடுகள் ‘சபிக்கப்பட்டவை’. எகிப்து, சூடான், சவுதி அரேபியா மற்றும் இந்தியா ஆகியவை ‘ஆசிர்வதிக்கப்பட்டவை’.

நெதன்யாகு தனது உரையில், “ஈரானுக்கு நான் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் எங்களைத் தாக்கினால் நாங்களும் உங்களைத் தாக்குவோம். இஸ்ரேலின் நீண்ட கரம் செல்ல முடியாத இடம் என ஈரானில் எதுவுமே இல்லை. இது முழு மத்தியக் கிழக்கு நாடுகளுக்கும் பொருந்தும்” என்று எச்சரித்தார்.

தொடர் தாக்குதல்களின் மூலம் காஸாவுக்குச் செய்ததை லெபனானுக்கு தன்னால் செய்ய முடியும் என்று பறைசாற்றி வருகிறார் நெதன்யாகு. ஆனால், லெபனான் அரசியல் ரீதியாக வலுவில்லாத நாடு. அதன் பொருளாதாரம் ஏற்கெனவே அதள பாதாளத்தில் கிடக்கிறது. 44% மக்கள் வறுமையின் கோரப்பிடியில் உழல்கின்றனர். இப்படியான சூழலில் ஒரு யுத்தம் என்பது அந்த நாட்டை பேரழிவுக்கு இட்டுச் செல்லும்.

நெதன்யாகுவின் இந்த நடவடிக்கைகளுக்காக இஸ்ரேலும் மிகப் பெரிய விலையை கொடுக்காமல் இல்லை. இஸ்ரேலின் பொருளாதாரம் வீழ்ந்து கொண்டிருக்கிறது. அந்நிய முதலீடுகள் குறைந்துவிட்டன. சுற்றுலா பயணிகளின் வருகை கிட்டத்தட்ட அறவே நின்றுவிடும் சூழல். ஏறக்குறைய 46,000 தொழில் நிறுவனங்கள் திவால் ஆகிவிட்டன. நாட்டின் கடனும் பல மடங்கு எகிறியிருக்கிறது. இப்படியான நிலையில், நெதன்யாகுவின் பிடிவாத குணமும், போர் வெறியும் மென்மேலும் அந்நாட்டை படுகுழியில் தள்ளிவிடும் என்பதே போராடிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான யூதர்களின் கவலையாக இருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk