மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்: ‘பசுவிற்குத் தாய் அந்தஸ்து’ சிவசேனா-பாஜக கூட்டணி அரசு அறிவிப்பு

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் நவம்பர் மத்தியில் நடக்க இருக்கும் நிலையில் அதற்கான அறிவிப்பு எந்நேரமும் வெளியாகும் என்ற நிலை இருக்கிறது. இதனால், சிவசேனா – பா.ஜ.க., கூட்டணி அரசு அவசர அவசரமாகப் பல்வேறு திட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறது.

நேற்று பிரதமர் நரேந்திர மோடி ஒரே நாளில் காணொளி காட்சி மூலம் ரூ.11200 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இன்று மகாராஷ்டிரா அமைச்சரவை அவசரமாகக் கூடியது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒரே நேரத்தில் 38 முடிவுகள் எடுக்கப்பட்டன. அதோடு இதில் பசு மாட்டைத் தாயாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டது. அதாவது, ராஜமாதாவாக அறிவிக்கப்பட்டது. இதிகாசக் காலங்களிலிருந்து பசுவைப் புனிதமாகக் கருதுவதாலும், கிருஷ்ணருக்குப் பசு நெருக்கமானது என்பதாலும் இம்முடிவு எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

பசுவின் பால், சாணம், கோமியம் போன்ற அனைத்துமே பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுகின்றன. இந்தியக் கலாச்சாரத்திலும் பசு ஒன்றி இருக்கிறது. அதனைக் கருத்தில் கொண்டு பசுவை மகாராஷ்டிராவின் ராஜமாதாவாக அறிவித்து முடிவு எடுக்கப்பட்டது.

இது குறித்து துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டியில், “நாட்டுப் பசுமாடுகள் விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவேதான் அதற்குத் தாய் அந்தஸ்து கொடுத்து முடிவு செய்யப்பட்டுள்ளது. கோஷாலாக்களில் நாட்டு மாடுகளின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கத் தேவையான உதவிகள் வழங்கப்படும்” என்றார். நாட்டில் முதல் முறையாக உத்தரகாண்ட மாநிலம் பசுவிற்குத் தாய் அந்தஸ்து வழங்கியது.

தாராவி தகுதியில்லாத குடிசைவாசிகளுக்கு வீடு

இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், தாராவி குடிசை மறுசீரமைப்பு திட்டத்தில் மாற்று வீடு பெறத் தகுதியில்லாதவர்களுக்கு வாடகை வீடு திட்டத்தின் கீழ் வீடு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதோடு சோயா பீன்ஸ், பருத்தி விவசாயிகளுக்கு மானியம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. 49 லட்சம் விவசாயிகளுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் இந்த மானியத்தை வரவு வைக்க முடிவு செய்யப்பட்டது. நாட்டுப் பசு மாடு இனப்பெருக்கத்திற்கு மானியம், மும்பை ரமாபாய் அம்பேத்கர் நகர் குடிசை மேம்பாட்டுத் திட்டத்தை விரைவுபடுத்தவும், சித்தி விநாயக் கோயில் கமிட்டி உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது உட்பட 38 முடிவுகள் எடுக்கப்பட்டன.

தேவேந்திர பட்னாவிஸ்

4860 ஆசிரியர்கள் நியமிக்கவும், மாதுளை மற்றும் சீத்தாப்பழம் மையங்கள் ஏற்படுத்தவும் இதில் முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுவே இறுதி அமைச்சரவைக் கூட்டமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நாக்பூரில் பிரதான இடத்தில் பா.ஜ.க., மாநில தலைவர் சந்திரசேகரின் பவன்குலே கல்வி அறக்கட்டளைக்கு நிலம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. நேற்று ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களின் சர்க்கரை ஆலைகளுக்குக் கடனுதவி வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. இரண்டு நாள்களுக்கு முன்பு தலைமைத் தேர்தல் ஆணையர் மகாராஷ்டிராவிற்கு வந்து தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்திவிட்டுச் சென்றார். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு மாநில டி.ஜி.பி. ரேஷ்மி சுக்லாவை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb