Udhayanidhi Stalin : “துணை முதலமைச்சர் என்பது பதவியல்ல, பொறுப்பு..” – உதயநிதி ஸ்டாலினின் பதிவு!

துணை முதலமைச்சராக இன்று பொறுப்பேற்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக்கப்படுவார் என தி.மு.க வட்டாரங்களே நீண்ட நாள்களாக முக்கிய மேடைகளில் பேசி வந்தது.

தற்போது அந்த அறிவிப்பும் வெளிவந்திருக்கிறது. முதல்வரின் பரிந்துரைகளை ஏற்று ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இன்று மதியம் 3.30 மணிக்கு துணை முதல்வராக ஆளுநர் மாளிகையில் பதவியேற்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

ஆட்சிக்கு வந்த மூன்றாண்டுகளில் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், துணை முதல்வர் என அசுர வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார் உதயநிதி. இந்த அறிவிப்பு வெளியானதும் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துகளையும் பெற்றார்.

துணை முதல்வர் பதவி குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில், ” நம் பெருமைமிகு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை நமக்கு அளித்த கழகத்தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை, பொதுச்செயலாளர் – பொருளாளர் மற்றும் மாண்புமிகு அமைச்சர்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம். ‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு. இதனை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக, தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வகுத்து தந்த பாதையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டலில், சக அமைச்சர் பெருமக்களோடு இணைந்து பணியாற்றுவோம்.” என பதிவிட்டிருக்கிறார்.