Mudhal VC: StartUP நிறுவனங்களில் ரூ.125 கோடி முதலீடு… யாருக்கு கிடைக்கும்?

சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற எண்ணம் இன்றைக்கு எல்லோரிடமும் அதிக அளவில் காணப்படுகிறது. வேலை செய்வதை விட வேலை தருவதையே பலரும் விரும்புகின்றனர். பலரும் பல ஸ்டார்டஅப் ஐடியாக்களை தங்கள் கையில் வைத்துக்கொண்டு அதை செயல்படுத்த பையில் பணம் இன்றி அலைகிறார்கள். இதற்கு வழி செய்வது தான் Mudhal VC திட்டம்.

KISSFLOW நிறுவனத்தின் நிறுவனரும் , தலைமை நிர்வாகியுமான சுரேஷ் சம்பந்தம் கடந்த செப்டெம்பர் 26 அன்று சென்னையில் புதிய ஸ்டார்டப் ஐடியாக்களின் மீது முதலீடு செய்வதற்காக Mudhal VC என்னும் ஒரு திட்டத்தை தொடங்கியுள்ளார்.

சுரேஷ் சம்பந்தம்

தமிழ்நாட்டில் உள்ள டியர் 2 (Tier2) & டியர் 3 (Tier 3) நிறுவங்களை மையமாகக் கொண்டு ஸ்டார்ட்அப்களை மேம்படுத்த தொடங்கப்பட்டிருப்பது தான் MudhalVC. இந்த திட்டம் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தொடக்கத்தில் மட்டுமல்லாமல் ஏற்கனவே தொடங்கப்பட்ட ஸ்டார்டப் நிறுவனங்களின் மேம்பாட்டுக்கும் உதவுகிறது. உணவு தொழில்நுட்பம், எலெக்ட்ரிக் வாகனங்கள், ஹெல்த் டெக்னாலஜி என பல்வேறு துறைகளில் இந்த MudhalVC முதலீடு செய்கிறது.

புக்கிங் பீ (Booking Bee), மீன் சட்டி (Meen Satti), மஷ்ரூம் மாமா (Mushroom Mama), பிக்மைஆட் (Pickmyad) , அமுரா (Amura) , பிவெர்சிட்டி (Bversity), சோஷியல் கேலரி (Social Gallery), இன்ஸ்பெக்சன் ஒன் (Inspection One), பேட் பாய் (Bad Boy), கரெக்ட் மேட் (Correctmate) மற்றும் இன்னும் சில நிறுவனங்கள் இந்த திட்டத்தின் மேலாண்மை குழுவில் பங்கு வகிக்கின்றன.

Mudhal VC பற்றி தலைமை நிர்வாகி சுரேஷ் சம்பந்தம் கூறும்பொழுது, “Mudhal VC ஸ்டார்டஅப் தொடங்குபவர்களுக்கு ஒரு ஆகச்சிறந்த அடித்தளமாக இருக்கும். முதலில் பயிற்சி, பின்னர் முதலீடு என்பதே இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கம். ஒரு ஸ்டார்ட்அப்பில் முதலீடு செய்வதற்கு முன் தரப்படும் பயற்சியின் மூலம் ஒரு தெளிவான யோசனையும், புரிதலும் எற்படும்.

கடந்த 2 ஆண்டுகளில் ஐடியா பட்டறை (Idea Pattarai) மூலம் 1000 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு பயிற்சி அளித்துள்ளது இதில் 75-க்கும் அதிகமான ஸ்டார்டஅப் நிறுவனங்கள் பல்வேறு நிலைகளில் உள்ள தங்கள் நிறுவனங்களின் முன்னேற்றத்திற்காக யோசனைகளையும், பயிற்சிகளையும் பெற்றுள்ளனர். இதில் 15 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஏற்கவே MudhalVC-ன் கீழ் முதலீடு பெற்றுள்ளன” என்றார்.

சுரேஷ் சம்பந்தம்

மேலும்,”Mudhal VC மூலம் அடுத்த 3-4 ஆண்டுகளில் ₹125 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த முதலீடு இரண்டு நிலைகளில் செய்யப்படும். முதல் பகுதியில் ₹25 கோடியும், இரண்டாம் நிலையில் ₹100 கோடியும் முதலீடாக செய்யப்படும்” என்றார்.

முதலீடு யாருக்கு கிடைக்கும்?

“Mudhal VC தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்யும். புதுமையான யோசனைகளை வைத்துக் கொண்டு முதலீடு இல்லாமல் தவிப்பவர்களுக்கு Mudhal VC மிகவும் பயனுள்ளதாக இருக்கும். Mudhal VC ஸ்டார்ட்அப் நிறுவங்களுக்கு முதலீடு செய்வது மட்டுமல்லாது, அவர்களுக்கு தேவையான ஆலோசனை, தொடர்புகள் வெற்றிக்கு தேவையான உத்திகள் மற்றும் உலகமயமாக்கல் என எல்லவற்றிற்கும் துணை நிற்கும். இந்த திட்டம் தமிழ்நாடு ட்ரில்லியன் டாலர் திட்டத்திற்கும் ஒரு சிறந்த பங்களிப்பாக இருக்கும்”, என்றும் கூறினார்.

Mudhal VC மூலம் புதிய ஸ்டாரட்அப்கள் மட்டுமின்றி ஏற்கனவே தொடங்கி வெற்றிபெற முடியாமல் தவிக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் முதலீடுகளும் ஆலோசனைகளும் பெறலாம். Mudhal VC தொழில்துறையில் புதிய மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.