திமுக பவள விழா: “தமிழ்நாட்டிலிருந்து ஒரு செங்கல்லைக் கூட…” – கமல் ஹாசன் அனுப்பிய வாழ்த்துரை

தி.மு.க.வின் 75-ம் ஆண்டு முப்பெரும் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 17 ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது.

இது தி.மு.க.வினர் மட்டுமே கலந்துகொள்ளும் நிகழ்ச்சியாக இருந்தது. கூட்டணிக் கட்சிகள் கலந்துகொள்ளும் வகையில் தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டத்தை நடத்த, கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். அதன்படி தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம், காஞ்சிபுரத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்று வருகிறது.

பவள விழா

இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களான வைகோ, கி.வீரமணி, தொல்.திருமாவளவன், செல்வப்பெருந்தகை, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், பேராசிரியர் ஜவாஹிருல்லா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்வில் தி.மு.க., கூட்டணியில் இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொள்ளவில்லை. ஆனால் அவர் அனுப்பிய வாழ்த்து அறிக்கை வாசிக்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகி மவுரியா அதனை வாசித்தார். கமல்ஹாசன் அனுப்பிய வாழ்த்துரையில் அவர் கூறியிருப்பதாவது, “தமிழர்களின் நலன்களுக்காகக் களமாடுவதில் தி.மு.க., என்றும் சளைத்ததில்லை.

75 ஆண்டுகள் கண்ட பேரியக்கம் நூற்றாண்டு காண வாழ்த்துகிறோம். தவிர்க்கவே இயலாத காரணங்களால் என்னால் நேரில் பங்கேற்க இயலவில்லை. தி.மு.க., எனும் கோட்டை இருக்கும் வரை தமிழ்நாட்டிலிருந்து ஒரு செங்கல்லைக் கூட எவரும் எடுக்க முடியாது. கோட்டைச் சுவரில் கீறல் விழாதா எனக் காத்திருப்போரின் பகல் கனவு பலிக்கப் போவதில்லை.

மக்கள் நீதி மய்யம்

2000 ஆண்டுகளுக்கு இந்த மண்ணில் நீடித்த தீண்டாமை எனும் கொள்ளை நோய்க்கும், ஆதிக்கம் எனும் தொற்று நோய்க்கும், ஏற்றத்தாழ்வு எனும் புற்றுநோய்க்கும் 75 ஆண்டுகளாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டு இருக்கிறது தி.மு.க.,. தமிழுக்கும், தமிழருக்கும் உண்டான பங்கையும், மரியாதையையும் வேற்று சக்திகள் கெடுக்க நினைத்தால் அதைத் தடுக்க பாய்ந்து வரும் தமிழர்களின் கேடயம் தி.மு.க.,. ” என்று தெரிவித்திருக்கிறார்.