‘எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்’ – கெத்தாக சுற்றி வசமாக சிக்கிய கோவை இளம் ரெளடி.. வைரல் வீடியோ

கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் ரோஹித் (வயது 18). இவர் கலை அறிவியல் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்தார். இவர் மீது அடுத்தடுத்த புகார்கள் வந்ததால், கல்லூரி நிர்வாகம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே அவரை டிஸ்மிஸ் செய்துள்ளது.

கோவை ரெளடி ரோஹித்

அதன் பிறகும் அவர் கல்லூரி அருகே அடிக்கடி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்தக் கல்லூரியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஓணம் பண்டிகை கொண்டாடியுள்ளனர். அப்போது ரோஹித் பழைய ஐடி கார்டை காண்பித்து உள்ளே நுழைந்துள்ளார்.

இதுகுறித்து பிபிஏ படித்து வரும் முதலாமாண்டு மாணவர்கள் சாணக்கியன், ஈஸ்வரன், தருண் ஆகியோர் ரோஹித்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது ரோஹித் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, 3 மாணவர்களையும் தாக்கியுள்ளார். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது.

நண்பர்களுடன் ரோஹித்

இதுகுறித்து சூலூர் போலீஸ் அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் வாகன விபத்து ஒன்றில் சிக்கி கை உடைந்த நிலையில், ரோஹித்தை கைது செய்துள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

அந்த சம்பவம் குறித்து விளக்கிய ரோஹித், மற்ற மாணவர்களுக்கு அட்வைஸ் செய்த வீடியோவை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில் ரோஹித், “என் நிலைமைய பார்த்தீங்களா. எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன். நான்தான் கெத்துனு கத்தி எடுத்துட்டு சுத்திட்டு இருந்தேன்.

கோவை ரெளடி ரோஹித்

இப்ப வண்டில போறப்ப கீழ விழுந்து கடவுள் என்னைய தண்டிச்சுட்டார். எல்லாரும் அப்பா, அம்மா சொல்றதை கேட்டு படிங்க. இல்லாட்டி உங்களுக்கும் இதே நிலைமை தான்.” என்று கூறியுள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.