தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடியை டெல்லியில் இன்று நேரில் சந்தித்தார். இருவருக்குமிடையில் சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு, சமக்ரசிக்ஷா திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்படுவதைத் தடுப்பதற்கான நிரந்தரத் தேர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை ஸ்டாலின் முன்வைத்தார்.
சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமரிடம் வலியுறுத்திய கோரிக்கைகளை அடுக்கிய ஸ்டாலின், “சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல்கட்ட பணிகளை ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படுத்தியதைப் போலவே, இரண்டாம் கட்டப் பணிகளையும் செயல்படுத்த வேண்டும் என்பது தமிழ்நாட்டின் நிலைப்பாடு. ஒன்றிய நிதியமைச்சர் இதற்கான நிதி ஒதுக்கப்படும் என்று 2021-22ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அறிவித்தார். ஒன்றிய அரசின் திட்ட முதலீட்டு வாரியம் இதற்கான ஒப்புதலை அதே ஆண்டில் வழங்கியது.
இந்தப் பணிகளுக்கு இதுவரை ரூ.18,524 கோடி செலவிடப்பட்டிருந்தாலும், ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளிக்காததால் ஒன்றிய அரசின் நிதி மாநில அரசுக்கு வழங்கப்படவில்லை. இதனால், மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. இந்த தாமதமின்றி வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறேன். ஒன்றிய அரசு 60 சதவிகித நிதியையும், தமிழ்நாடு அரசு 40 சதவிகித நிதியையும் அளித்து செயல்படுத்தக்கூடிய ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் இந்த நிதியாண்டில் ஒன்றிய அரசு வழங்க வேண்டியது ரூ.2,152 கோடி.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திடாததே இதற்குக் கரணம் என்று ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது. தேசிய கல்விக் கொள்கையின் பல நல்ல கூற்றுகளைத் தமிழ்நாடு அரசு ஏற்கெனவே செயல்படுத்தியிருக்கிறது. ஆனால், தேசிய கல்விக் கொள்கையின் மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு ஒப்புக்கொள்ளவில்லை. அதனால், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறுத்தப்படவேண்டும் என்று தெரிவித்திருந்தோம். இருப்பினும், அதில் கையெழுத்திடாததால் ஒன்றிய அரசு நிதி விடுவிக்காததால் ஆசிரியர்களுக்குச் சம்பளம் வழங்க முடியாமல் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழலைச் சுட்டிக்காட்டியிருக்கிறோம். உடனடியாக இந்தத் திட்டத்துக்கான நிதியை அளிக்க வலியுறுத்தியிருக்கிறோம்.
தமிழ்நாட்டு மீனவர்கள் சந்தித்து வரும் வாழ்வாதார பிரச்னைகளை விரிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறோம். இலங்கை கடற்படையின் கைது உள்ளிட்ட துன்புறுத்தல் நடவடிக்கைகள் குறித்து பிரதமருக்கும், வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் பலமுறை வலியுறுத்தியும் இந்த பிரச்னை நீடிக்கிறது. இந்த 7 ஆண்டுகளில் அதிகளவில் இந்த சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கிறது. 191 மீன்பிடி படகுகளும், 145 மீனவர்களும் இலங்கை கடற்படையால் தற்போது சிறைபிடிக்கப்பட்டிருக்கின்றனர்.
உடனடியாக அவர்களை விடுவிக்க வேண்டும் என கூறியிருக்கிறேன். அடுத்த மாதம் கொழும்புவில் நடைபெறவிருந்த இந்தியா – இலங்கை கூட்டுக்குழுக் கூட்டத்தில் இதுகுறித்து விவாதித்துத் தீர்வு காண வலியுறுத்தியிருக்கிறேன். இலங்கை புதிய அதிபரிடம் இந்த கோரிக்கையை ஒன்றிய அரசு முன்வைக்க வலியுறுத்தியிருக்கிறேன். இந்த மூன்று முக்கிய கோரிக்கைகள் பற்றிக் கலந்தாலோசித்து முடிவெடுப்பதாகப் பிரதமர் உறுதியளித்திருக்கிறார்” என்று கூறினார்.