நெல்லை: 3 பேர் சாதிய படுகொலை செய்யப்பட்ட வழக்கு; 4 பேருக்கு மரண தண்டனை!

சங்கரன்கோவில் அருகே சாதிய முன்விரோதம் காரணமாக, கடந்த 2014ம் ஆண்டு 3 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு தூக்குத் தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து, திருநெல்வேலி வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், திருவேங்கடம் அருகில் உள்ள கிராமம் உடப்பன் குளம். இங்கு கடந்த 2014ஆம் ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது, ஒரு சமூகத்தினர், மற்றொரு சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் பட்டாசு வெடித்து கொண்டாடியதால் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

குற்றம்

இந்த பிரச்னையால் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட முன்விரோதம் நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்திருக்கிறது. இந்த நிலையில் 2014, மே மாதத்தில் நடைபெற்ற ஒரு விசேஷத்தில் பங்கேற்பதற்காக கோயமுத்தூர் மாவட்டம், துடியலூரைச் சேர்ந்த வேணுகோபால் (42) மற்றும் முருகன் (40) ஆகியோர் உடப்பன் குளம் வந்திருந்தனர்.

நிகழ்ச்சி முடிந்து அவர்கள் கிளம்பும்போது, அவர்களை வழியனுப்ப வந்த உடப்பன்குளத்தைச் சேர்ந்த காளிராஜ் (45) என்பவர், அவர்கள் இருவரையும் தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு சங்கரன்கோவிலை நோக்கிச் சென்றுள்ளார். அப்போது வடமன்குளம் பகுதிய ல் இவர்களை வழிமறித்த ஒரு கும்பல் பைக்கில் வந்த 3 பேரையும் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்துள்ளது.

இந்த படுகொலைகள் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த 25 நபர்கள் மீது திருவேங்கடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட 2ஆவது கூடுதல் அமர்வு வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (பிசிஆர்) நடைபெற்று வந்தது.

நீதிமன்றம்

வழக்கு விசாரணையின்போது ஜெயராம், பொன்ராஜ், சரவணன் ஆகியோர் உயிரிழந்தனர். எஞ்சிய 22 பேரில் 11 பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டது. 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர். பொன்னுமணி, குட்டிராஜ், குருசாமி, காளிராஜ், கண்ணன், முருகன், முத்துகிருஷ்ணன், சுரேஷ் உட்பட 11 பேரை குற்றவாளிகள் என கடந்த 24ஆம் தேதி அறிவித்தது நீதிமன்றம்.

ஆனால் தண்டனை விவரங்கள் செப். 27ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு மேல் திறந்த நீதிமன்றத்தில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்த நீதிபதி, வழக்கை 27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

செப். 27ஆம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படுவதால், குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்த 11 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். இதனால், திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மாலை 4 மணியளவில் விசாரணையை தொடங்கிய நீதிபதி, வழக்கை மீண்டும் ஒத்தி வைத்தார். இரவு சுமார் 8.30 மணியளவில் இவ்வழக்கின் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டோருக்கான தண்டனை விவரங்களை அறிவித்தார் திருநெல்வேலி வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார்.

பொன்னுமணி, குருசாமி, முத்துக்கிருஷ்ணன், காளிராஜ் ஆகிய 4 பேர் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்ததால், இவர்கள் 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

எஞ்சிய 7 பேரில், 5 பேருக்கு தலா ஐந்து ஆயுள் தண்டனைகளும், இரண்டு பேருக்கு தலா இரண்டு ஆயுள் தண்டனைகளையும் விதித்திருந்தார். மேலும், குற்றவாளிகள் செலுத்த வேண்டிய அபராதத் தொகையினை தீர்ப்பின் நகலில் பார்த்து தெரிந்து கொண்டு செலுத்துமாறு தீர்ப்பளித்தார் நீதிபதி.

இந்த தீர்ப்பு அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.