கோர்ட் வாசலில் அதிரடி… காரிலிருந்த பிரபல ரவுடியை தூக்கிச் சென்ற போலீஸார்.. காரணம் என்ன?

சேலம் கிச்சுப்பாளையத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஜான். இவர் மீது இரண்டு கொலை வழக்கு உள்பட ஏழு வழக்குகள் விசாரணையில் உள்ளது.

பிரபல ரவுடியான செல்லதுரையின் கூட்டாளியான ஜான், பிரபல ரவுடியான சூரியின் மகன் நெப்போலியனை செல்லதுரை உடன் சேர்ந்து கொலை செய்ததாக வழக்கு உள்ளது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

காரிலிருந்து ரவுடியை இழுத்துச் சென்ற போலீஸார்

பின்னர் செல்லதுரைக்கும், ஜானுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. இதனால் செல்லதுரையை தீர்த்துகட்ட திட்டமிட்ட ஜான் ரவுடிகளை களம் இறக்கினார். திருச்சி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட கொம்பன் ஜெகன் மற்றும் கன்னியாகுமரி, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கூலிப்படையை இறக்கி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு செல்லதுரை தீர்த்து கட்டினார். இந்த வழக்கில் 32 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு சேலம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில் மற்றொரு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ஜான் கடந்த சனிக்கிழமை சிறையில் இருந்து வெளியே வந்தார். கடந்த 24ஆம் தேதி கூட்டாளியுடன் சேர்ந்து வழிப்பறி செய்ததாக கிச்சிபாளையம் போலீஸார் பாலமுருகன், ஜான், சின்னவர் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று ஜான் சேலம் கோர்ட்டில் நெப்போலியன் கொலை வழக்கில் ஆஜராவதற்காக வந்திருந்தார். அப்போது கிச்சிபாளையம் போலீஸார் கோர்ட் வளாகத்தில் காத்திருந்தனர். கோர்ட்டில் ஆஜராகி விட்டு தனது மனைவியின் காரில் ஜான் வெளியே வந்தார். கோர்ட் நுழைவு வாயிலில் இருந்த போலீஸார் அவரது காரைச் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் காரில் இருந்து அவரை கைது செய்து அங்கு தயாராக இருந்த போலீஸ் வாகனத்தில் அவரை ஏற்றிக் கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்றனர்.

காரிலிருந்து ரவுடியை இழுத்துச் சென்ற போலீஸார்

இதனால் கோர்ட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் வழிப்பறி வழக்கில் பாலமுருகன் என்பவரை நேற்று காலை போலீஸார் கைது செய்தனர். தற்போது ஜானையும் கைது செய்துள்ள நிலையில் மற்றொரு கூட்டாளியான சின்ன வரையும் கைது செய்தனர். ரவுடி ஜானின் மனைவி சரண்யா வழக்கறிஞர் எனக் கூறப்படுகிறது. தனது காரில் இருந்து கணவரை எந்த வழக்கும் இல்லாத நிலையில் போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றதாக மாவட்ட நீதிபதிக்கு புகார் மனு அனுப்பி உள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.