பாஜக தலைவரின் மனைவி தொடர்ந்த அவதூறு வழக்கு; சிவசேனா எம்.பி சஞ்சய் ராவுத்திற்கு 15 நாள் சிறை

மகாராஷ்டிராவில் சிவசேனா (உத்தவ்) கட்சியைச் சேர்ந்த ராஜ்ய சபை எம்.பி.யான சஞ்சய் ராவுத், பா.ஜ.க., தலைவர்களில் ஒருவரான கிரீத் சோமையா, அவரது மனைவி மேதா சோமையா ஆகியோர் மும்பை அருகில் உள்ள மீரா பயந்தர் பகுதியில் கழிவறைகள் கட்டி பராமரிக்கும் ஒப்பந்தம் பெற்றதில் 100 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்திருப்பதாகக் குற்றம் சாட்டி இருந்தார்.

இக்குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று கூறி சஞ்சய் ராவுத் மீது மேதா கிரீத் சோமையா தனது வழக்கறிஞர் விவேகானந்த் குப்தா மூலம் மும்பை சிவ்ரியில் உள்ள மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது மேதா கிரீத் சோமையா சார்பாக ஆஜரான வழக்கறிஞர் விவேகானந்த் குப்தா, “குற்றம் சாட்டப்பட்ட நபர் எனது மனுதாரருக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை ஊடகத்தில் பேட்டியாகக் கொடுத்துள்ளார். பொதுமக்கள் மத்தியில் தன்னைக் களங்கப்படுத்தும் நோக்கில் இந்த குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்துள்ளார்” என்று குறிப்பிட்டார்.

இவ்வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். இதில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராவுத்திற்கு 15 நாள் சிறைத் தண்டனை வழங்கினார். இது தவிர 25 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

இத்தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த சஞ்சய் ராவுத், “சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு என்னைச் சிறையில் அடைக்க முயல்கின்றனர். நாட்டின் பிரதமர் தலைமை நீதிபதி வீட்டிற்குச் சென்று மோதக் சாப்பிடுகிறார். அப்படி இருக்கும் போது ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் எங்களுக்கு எப்படி நீதி கிடைக்கும். எனக்கு எதிராகத் தீர்ப்பளித்த நீதிமன்றத்தை மதிக்கிறேன். ஊழல் குறித்து நாங்கள் கேள்விகள் எழுப்பி இருந்தோம். முறைகேடுகள் நடந்திருந்தது. அதற்கான ஆதாரங்களையும் கொடுத்திருந்தோம்.

சஞ்சய் ராவத்

இப்பிரச்னையை முதலில் மீரா பயந்தர் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் பிரவீன் பாட்டீல் எழுப்பினார். அவர் முதல்வருக்கும் இது தொடர்பாகக் கடிதம் கொடுத்திருக்கிறார். இது குறித்து சட்டமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்தது. ஆனால் என் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. உண்மையைப் பேசுவதை ஒருபோதும் நிறுத்தமாட்டேன். நாங்கள் தீர்ப்பை எதிர்த்து செசன்ஸ் நீதிமன்றத்திற்குச் செல்வோம்.” என்றார்.