Senthil Balaji: `வாழ்நாளெல்லாம் நன்றி செலுத்துவேன்’ – சிறைக்கு வெளியே செந்தில் பாலாஜி முதல் வார்த்தை

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, பண மோசடி வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் நள்ளிரவில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 15 மாதங்களாக சிறையிலிருந்த செந்தில் பாலாஜி, நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி வந்தார்.

செந்தில் பாலாஜி

இவ்வாறிருக்க, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவு மற்றும் பிணைத் தொகை ஆவணங்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வழக்கறிஞர்கள் தாக்கல் செய்தனர்.

செந்தில் பாலாஜி

அமலாக்கத்துறை தரப்பும் அதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்தது. பின்னர், நீதிபதியும் ஆவணங்களை ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில், புழல் சிறையிலிருந்து செந்தில் பாலாஜி தற்போது வெளிவந்திருக்கிறார். சிறைக்கு வெளியே இருந்த திமுக-வினர் பட்டாசு வெடித்து, மலர்கள் தூவி செந்தில் பாலாஜியை வரவேற்றனர். ஆர்.எஸ்.பாரதி தலைமையில் திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, “என்மீது அன்பும் நம்பிக்கையும் கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி செலுத்துவேன். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடரப்பட்ட பொய் வழக்கு இது. இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்” என்று தெரிவித்தார்.