திமுக குறித்த விமர்சனம்; ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை இருக்குமா? – மௌனம் கலைத்த திருமாவளவன்

திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் இடையே சமீபகாலமாக விரிசல் ஏற்பட்டுள்ளது. விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, திமுக குறித்து முன்வைத்த கருத்துக்கு எதிர்ப்புகள் எழுந்தன. திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா உள்ளிட்டோர் எதிர்வினையாற்றியிருந்தனர்.

ஆதவ் அர்ஜுனா

ஆனால், தன்னுடைய கருத்தில் உறுதியாக இருப்பதாக சொன்ன ஆதவ் அர்ஜூனா ராசா குறித்தும் விமர்சித்துள்ளார். இந்த விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எந்த கருத்தும் சொல்லாமல் மௌனம் காப்பதாக திமுகவினர் கூறி வந்தனர்.

இந்நிலையில் திருமாவளவன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக – விசிக கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை. விரிசல் உருவாவதற்கும் வாய்ப்பு இல்லை. என்னுடைய ஊடக பக்கத்தில் பதிவான சிறிய வீடியோவில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கருத்தை பலரும் விவாதத்துக்கு எடுத்துக் கொண்டார்கள்.

திருமாவளவன்

அது மேலும் மேலும் பல விவாதங்களுக்கு இடமளித்துள்ளது. திமுக, விசிக இடையில் எந்த சிக்கலும் இல்லை.” என்றார்.

அப்போது செய்தியாளர்கள், ‘ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை இருக்குமா?’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த திருமாவளவன், “உட்கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை செய்துவிட்டுதான் எந்த நடவடிக்கையும் இருக்கும்.

முதல்வர் ஸ்டாலின் – விசிக தலைவர் திருமாவளவன்

இதுகுறித்து கட்சி முன்னணி பொறுப்பாளர்கள், பொதுச் செயலாளர் உயர்நிலைக் குழுவில் இடம் பெற்றுள்ள தோழர்களுடன் தொலைபேசி மூலம் பேசியிருக்கிறேன். அவர்களுடன கலந்து பேசி அது தொடர்பான முடிவுகளை எடுப்போம்.” என்றார்.