`சம்பளம் கேட்ட பெண் ஆசிரியருக்கு பிரம்பு அடியா?’ – பள்ளி தாளாளர் மீது வழக்குப்பதிவு

தஞ்சாவூர் பட்டுக்கோட்டை மெயின் சாலையில் ஒரத்தநாடு அருகே உள்ள புதுாரில் தனியார், சண்முகம் மந்திர் மெட்ரிக்குலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் தாளாளர் மாதவன் (60), தலைமை ஆசிரியராக ரஞ்சிதா என்பவர் பணி செய்தார். இந்நிலையில் பள்ளியில் ஆசிரியர்களுக்கு கடந்த சில மாதங்களாக முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இதே போல் தலைமை ஆசிரியருக்கும் சம்பளம் கொடுக்கவில்லை. இதுகுறித்து ஆசிரியர்கள் மாதவனிடம் பலமுறை கேட்டும் அவர் முறையாக பதில் சொல்லவில்லை என்கிறார்கள்.

ஒரத்தநாடு பள்ளியின் தாளாளர் மாதவன்

சம்பள பிரச்னை உள்ளிட்டவையால் பள்ளியில் நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தலைமை ஆசிரியர் ரஞ்சிதாவை பணியிலிருந்து விலகுமாறு, பள்ளியின் தாளாளர் மாதவன் வற்புறுத்தியுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. அத்துடன், ரஞ்சிதா பணியில் இருந்து நான் நின்று விடுகிறேன் எனக்கு வர வேண்டிய சம்பள பாக்கியை உடனே கொடுத்து செட்டில் செய்யுங்கள் என கேட்டுள்ளார். அப்போது 19-ம் தேதி வந்து சம்பளத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார் மாதவன்.

அதே போல் கடந்த 19-ம் தேதி சம்பளத்தை பெறுவதற்காக மாதவன் ரஞ்சிதாவை அழைத்ததாக தெரிகிறது. அதன்படி ரஞ்சிதா தனது கணவன் பிரகாஷ்ராஜ் மற்றும் தனது சிறுவயது மகனையும் அழைத்துக்கொண்டு, பள்ளிக்குச் சென்றுள்ளார். தாளாளர் மாதவன், பள்ளியில் நுழைவு வாயிலில் நீளமான பிரம்பை கையில் வைத்துக் கொண்டு நின்றுள்ளார். அப்போது ரஞ்சிதாவை கம்பால் அடிக்க பாய்ந்துள்ளார். உடனே பிரகாஷ்ராஜ் தடுக்க, போடா இங்கிருந்து என மரியாதை குறைவாக பேசினார் மாதவன். தன் அம்மாவை அடிக்க சென்றதால் அவரது மகன் கதறி அழுதான். இவற்றை தன் செல்போனில் ரஞ்சிதா, வீடியோ எடுக்க ஏய் போட்டோ எடுத்த பிய்ச்சிடுவேன் என மிரட்டியுள்ளார்.

தாளாளர் மாதவன் | ஒரத்தநாடு தனியார் பள்ளி

மாதவனுடன் சேர்ந்து கொண்டு பள்ளி நிர்வாகியான குருராஜ் ரஞ்சிதாவை திட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து ரஞ்சிதா ஒரத்தநாடு போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில், பள்ளியின் தாளாளர் மாதவன், நிர்வாகி குருராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.