Encounter: சிங்கம் பட வில்லன் போல் வாழ்க்கை; மொத்தம் 39 வழக்குகள் – சீசிங் ராஜா முழுப் பின்னணி!

ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ராஜா, சென்னை கிழக்கு தாம்பரத்தில் வசித்து வந்தார். 9-ம் வகுப்பு வரை படித்த இவன், வாகனங்களை சீசிங் செய்யும் வேலைகளைச் செய்து வந்தான். அதாவது, வாகனக் கடன் கொடுக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை. கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வதுதான் இவரின் அப்போதைய பணி. அப்போது தாம்பரம் மார்க்கெட் பகுதியில் கோலோச்சிய பிரபலமான  ரௌடி ஒருவருடன் சேர்ந்து மாமூல் வசூலிப்பது, ரியல் எஸ்டேட் கட்டப்பஞ்சாயத்துக்களில் ஈடுபட்டான்.  கடந்த 2007-ம் ஆண்டு பணம் கேட்டு மிரட்டியதாக ராஜா, ஆற்காடு சுரேஷ்  ஆகியோர் மீது கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் முதல் வழக்கு பதிவானது.  

சீசிங் ராஜா

2008-ம் ஆண்டு  கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் ராஜா மீது கொலை வழக்கு  பதிவு செய்யப்பட்டது. அடுத்தடுத்து வழக்குகள் பதிவானதால் சிட்லபாக்கம் காவல் நிலைய ரௌடிகள் பட்டியலில் ஏ பிளஸ் கேட்டகிரியில் ராஜாவின் பெயரும் சேர்க்கப்பட்டது. வாகனங்களை சீசிங் செய்யும் வேலைப் பார்த்தால் போலீஸ் ரெக்கார்டில்  சீசிங் ராஜா என்ற அடைமொழி சேர்க்கப்பட்டது. இவன் மீது 6 கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் என 39  வழக்குகள் உள்ளன. ஏழு தடவை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான்.

தமிழகம் ஆந்திர மாநில போலீஸ் ரெக்கார்டில் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக சீசிங் ராஜா இருந்து வந்தான். இந்தநிலையில்தான் சென்னை போலீஸார், சீசிங் ராஜாவை ஆந்திராவில் கைது செய்தனர். பின்னர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்ய  நீலாங்கரை அக்கரை பகுதிக்கு அழைத்துச் சென்ற இடத்தில் சீசிங் ராஜாவுக்கும் வேளச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் இன்ஸ்பெக்டர் விமல் சுட்டதில் மார்பு, வயிறு பகுதியில் குண்டுகள் பாய்ந்து சீசிங் ராஜா உயிரிழந்தார். இந்த என்கவுன்ட்டர் சம்பவம் தமிழக ரௌடிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

என்கவுன்ட்டர் ஸ்பாட்

`யார் இந்த சீசிங் ராஜா?’ என ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாரிடம் விசாரித்தோம்.

“என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட சீசிங் ராஜாவும், சென்னை பட்டினம்பாக்கம் பகுதியில் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ் என்ற ரௌடியும் நெருங்கிய நண்பர்கள். அதனால்தான் ஆற்காடு சுரேஷிக்காக பூந்தமல்லி நீதிமன்ற பகுதியில் ரௌடி சின்னாவையும் அவரின் வழக்கறிஞர் பகத்சிங்கையும் சீசிங் ராஜா தலைமையிலான டீம் 2010-ம் ஆண்டு கொலை செய்தது. இந்த இரட்டைக் கொலை சம்பவத்துக்குப்பிறகுதான் சீசிங் ராஜாவின் பெயர் ரௌடிகள் மத்தியில் பிரபலமானது. அதன்பிறகு ஆற்காடு சுரேஷ் டீமுடன் இணைந்து 2015-ம் ஆண்டில் பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் தென்னரசுவை வெங்கல் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில்  சீசிங் ராஜா டீம் நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்தது. இதுதான் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்குக்கு ஆற்காடு சுரேஷ் மீதும் சீசிங்ராஜா மீதும் கோபத்தை ஏற்படுத்தியது.

ரௌடியாக வலம் வந்த சீசிங் ராஜா, கூலிப்படைத் தலைவனாக மாறி ஆந்திராவிலும் தமிழகத்திலும் ரியல் எஸ்டேட் விவகாரம், செம்மரக்கட்டை கடத்தலிலும் ஈடுபடத் தொடங்கினார். சீசிங் ராஜாவைப் பொறுத்தவரை துப்பாக்கி முனையில் கடத்தி மிரட்டியே பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார். ஆனாலும் பாதிக்கப்பட்டவர்கள் சீசிங் ராஜா மீதான பயத்தில் காவல் நிலையங்களில் புகாரளிப்பதில்லை.

பிரபல ரௌடி சீசிங் ராஜா

ரௌடியிஸத்தின் மூலம் சம்பாதித்த பணத்தில்  விலை உயர்ந்த சொகுசு கார்கள், ஆந்திராவில் பண்ணை வீடு என ஆடம்பரமாக சீசிங் ராஜா வாழ்ந்து வந்தார். அவர் மீதான வழக்குகளில் ஆஜராகாமல் அவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது.  அதோடு  ராஜா நீதிமன்றத்தால் விளம்பரப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்தநிலையில்தான் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரௌடி ஒருவர் அளித்த தகவலின்அடிப்படையில் ஆந்திரா கடப்பாவில் பதுங்கியிருந்த சீசிங் ராஜாவை 22-ம் தேதி சுற்றி வளைத்தோம்.

இவர் மீது வேளச்சேரியில் துப்பாக்கி காட்டி மிரட்டிய வழக்கு நிலுவையிலிருந்தால் அந்த துப்பாக்கியைப் பறிமுதல் செய்ய சீசிங் ராஜாவை நீலாங்கரை அக்கரை பகுதிக்கு அழைத்துச் சென்றோம். அப்போது திடீரென துப்பாக்கியை எடுத்த சீசிங்ராஜா, இன்ஸ்பெக்டர் விமல், போலீஸாரை நோக்கி சுட்டார். அதனால் தற்காப்புக்காக இன்ஸ்பெக்டர் விமல் சுட்டத்தில் சீசிங் ராஜா மீது குண்டுகள் பாய்ந்து அவர் உயிரிழந்தார்.

 

என்கவுன்ட்டர் ஸ்பாட்

சீசிங் ராஜாவை பொறுத்தவரை அரசியல் கட்சியில் இருக்கும் பிரபல ரௌடி ஒருவருடனும், தலைமறைவாக இருக்கும் வடசென்னை ரௌடி ஒருவருக்கும் இடையே நீண்ட காலமாக முன்விரோதம் இருந்து வருகிறது. மேலும் சீசிங் ராஜாவின் உறவினர் ஒருவர் அ.தி.மு.க-வில் உள்ளார். அவரின் தயவில் போலீஸாரின் என்கவுன்ட்டரில் பிளானிலிருந்து அ.தி.மு.க ஆட்சியில் தப்பி வந்தவர், தற்போது என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார்.

சீசிங் ராஜாவின் வாழ்க்கை, சிங்கம் படம் பார்ட் 1-ல் வரும் வில்லன் பிரகாஷ்ராஜின் கதாபாத்திரத்துடன் ஒத்துப்போகும். அந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், வீடு கட்டுபவர்களை மிரட்டியும் ஆள்களைக் கடத்தியும் பணம் பறிப்பார். அதைப்போலதான் சீசிங் ராஜாவும் நிஜத்தில் வாழ்ந்து வந்தார். இவருக்கு காவல்துறையிலேயே சிலர் உதவி செய்திருக்கிறார்கள் என்ற தகவலும் உண்டு. அதற்கு விசுவாசமாக இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு பிரமாண்டமாக சொகுசு பங்களா ஒன்றை சென்னை புறநகர் பகுதியில் கட்டிக் கொடுத்திருக்கிறாராம் சீசிங் ராஜா” என்றனர்.

என்கவுன்ட்டர் ஸ்பாட்

என்கவுன்ட்டர் சம்பவம் குறித்து இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தியிடம் பேசினோம். “ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் என்கவுன்ட்டரில் உயிரிழந்த  சீசிங் ராஜாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. சீசிங் ராஜா மீதான வழக்குகளில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் 10 பிடிவாரண்ட்கள் இருந்தன. வேளச்சேரி காவல் நிலையத்தில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட  சீசிங் ராஜா, என்கவுன்ட்டர் செய்யப்பட்டது தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தப்படவுள்ளது. அதோடு என்கவுன்ட்டர் தொடர்பாக நீலாங்கரை போலீஸார் வழக்க பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். ரௌடிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தொடரும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb