`3 BHK ரென்ட் எடுத்து ஆரம்பிச்சது; இப்போ மாசம் ரூ.70 லட்ச வருமானத்துல வந்து நிக்குது’ – Cookd CEO

ஜென் z தலைமுறையினருக்கு டஃப் கொடுக்கும் வகையில், தங்களது ஐடியாக்களால் சமையலை ஜாலி மோடில் எடுத்துச் சென்று, சமூக வலைத்தளங்களைத் தன் கையில் வைத்திருப்பவர்கள் தான் குக்ட்(Cookd). குக்ட் ரெசிப்பி மிக்ஸ் பரிச்சயப்படுவதற்கு முன்னர் யூடியூப், மற்றும் இன்ஸ்டாகிராமில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தைப் பிடித்து, இன்று 5 மில்லியன் ரசிகர்களோடு தனது குக்ட் பிராண்டின் மூலம் மாதம் 70 லட்சம் ரூபாய் டர்ன் ஓவர் செய்து வருகிறார், ஆதித்தியன் சோமு. சென்னையில் அவரது டீமுடன் அவரை சந்தித்துப் பேசினோம்.

”பொறந்தது எல்லாம் ஈரோடு. சின்ன வயசுல அப்பாவுக்கு டீ போட்டுக் கொடுப்பது, சின்ன சமையல் சார்ந்த வேலைகள் செய்றதுல அதீத ஆர்வம். இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்த போது காலேஜ் ஃபுட் கோர்ட்டை லீசுக்கு எடுத்து நடத்தினேன். அங்குள்ள மாஸ்டரிடம் சமையல் சார்ந்த நுணுக்கங்களைக் கத்துக்கிட்டு தொடங்கியது தான் இந்த பயணம். இந்த தொழிலுக்கு வருவதற்கு முன்பு நெட்ஃபிக்ஸ், அமேசான் மாதிரி ஹீரோ டாக்கீஸ் என்று ஒரு ஓ.டி.டி சர்வீஸ் நடத்தி வந்தோம். இது இந்தியாவிற்கு வெளியே வாழும் மக்களுக்காக தொடங்கப்பட்டது. ஹீரோ டாக்கீஸ் 2013 லிருந்து 2017 வரை நடைமுறையில் இருந்தது. ஹீரோ டாக்கீஸை இந்தியாவில் துவங்க முடிவு செய்தோம். ஆனால் இங்கு படங்களின் உரிமம் அதிக விலையில் இருப்பதால் அதை சட்டப்பூர்வமாக ஸ்ட்ரீமிங் செய்வதில் சிக்கலை எதிர்கொண்டோம். அந்த சமையத்தில் ஹீரோ டாக்கீஸை வேறு ஒரு நிறுவனம் வாங்க முன்வந்தது. அந்த சமையத்தில் அந்த முடிவு தான் சரியாக இருக்கும் என்று நம்பினோம்.

ஒருவேளை அப்போ ஹீரோ டாக்கீசை இந்தியாவில் லான்ச் பண்ணிருந்தா நாங்க தான் இன்னைக்கு டாப்ல இருந்துருப்போம். வாழ்க்கையில யார்கிட்டயும் வேலை செய்யக்கூடாதுனு காலேஜ் படிக்கும் போதே முடிவு பண்ணியதால, ஹீரோ டாக்கீஸ் முடிச்சதும் நிறைய பிசினஸ் ஐடியா யோசிச்ச அப்போ சமையல் எனக்கு பிடிக்கும். அதுல தொழில் தொடங்குனா இன்னும் சந்தோஷமா வேலை செய்ய முடியும்னு பிறந்தது தான் குக்ட்.

இது ஒரு பிராண்ட் ஆக மட்டும் இல்லாமல் ஒரு கண்டண்டாகவும் மக்கள் மனதில் அதிகம் பதிவாகியுள்ளது. சொல்லப்போனால் குக்ட் ஒரு பிராண்டாக தெரிவதற்கு முன்னால் மக்களுக்கு சோசியல் மீடியா மூலமாகத் தான் தெரியும். அது ஒரு கான்சியஸ் முடிவு தான். இன்று பெரிதளவில் மசாலா பிராண்டுகள் இருந்தாலும் எங்கள் பொருளை மக்கள் தேர்ந்தெடுக்க நம்பிக்கை தேவை. வீட்டு ஷெல்ஃபுக்குள் நுழைவதற்கு முன்பே ரெசிபி வீடியோக்கள் மூலமாக கிட்சனுக்குள் நுழைந்து விட்டோம். பொருளை வாங்க வைக்க தான் நாங்கள் முயற்சி செய்ய வேண்டும். அதன் பிறகு பொருளின் தரம் பேசும்.

குக்ட் பொருட்களைப் பொறுத்த வரை குறிப்பிட்ட பகுதியின் ஃபேமஸ் ரெசிப்பிகளை வீட்டில் சமைக்க சாத்தியப்படுத்தி தருகிறோம். உதாரணத்திற்கு, மட்ராஸ் 65, மதுரை சுக்கா மசாலா போன்றவை அடங்கும். எல்லாரும் எல்லா வகையான உணவுகளையும் அவர்களே செய்து அதுல இருந்து சந்தோஷ படுறதுல தான் உண்மையான சந்தோஷம் இருக்கு. எங்க கிட்ட இருக்குற வசதிகளை வைத்து கிளவுட் கிச்சன் (cloud kitchen) மாதிரி சமைத்து தர முடியும். அது இன்னும் கூட லாபகரமாக இருக்கும். ஆனா அப்படி செஞ்சா அது எங்க கொள்கைக்கு புறம்பா இருக்கும்.

ஆரம்பத்துல முதலீடா 30 லட்சம் தேவைப்பட்டது. நாங்க கண்டெண்டா இத கொண்டுபோனும்னு நினைச்சதால, கேமரா மைக்னு எல்லாமே காசு போட்டு வாங்கிட்டோம். ஒரு 3 பிஹெச்கே அப்பார்ட்மெண்ட் ரென்ட் எடுத்து ஆரம்பிச்சது இப்போ சோசியல் மீடியா, பிராண்ட் மூலமா மாசம் சுமார் 70 லட்சம் வருமானத்துல வந்து நிக்குது. இது மட்டும் இல்லாம, குக்ட் ஆப் இருக்கு. அதுல நம்ம கிட்ட இருக்குற பொருட்களை சொன்னால் அதுவே ஒரு ரெசிபி கொடுத்துரும். இந்த ஆப்ல நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் கதிர் முதலீடு பண்ணிருக்காங்க. குக்ட் இந்த அளவுக்கு ரீச் ஆகும்னு நெனைக்கல. எல்லாமே புது அனுபவங்கள் தான் தொடங்குது” என்கிறார் அந்த கொங்குத் தமிழில்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU