ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தல் அக்டோபர் 1-ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. பெருவாரியான விவசாய வாக்களார்கள் இருக்கும் ஹரியானா மாநிலத்தில், தேர்தல் களம் சுடுபிடித்திருக்கும் நிலையில், மாநிலக் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்ய வேண்டும் எனப் போராட்டத்தை முன்னெடுத்த மாநிலங்களில், குறிப்பிட்ட பங்கு ஹரியானா மாநிலத்துக்கு உண்டு. அதனால், அங்கு மிக கவனமாக செயல்படுகிறது பா.ஜ.க.
இந்த நிலையில், இமாச்சல் பிரதேசத்தின் மண்டி தொகுதியின் எம்.பி-யும், நடிகையுமான கங்கனா ரனாவத் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “நாட்டின் வளர்ச்சியில், விவசாயிகள்தான் நமது பலம். விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். சர்ச்சைக்குரிய கருத்தாக இருந்தாலும் பரவாயில்லை… ஒரு சில மாநிலங்கள் மட்டுமே எதிர்த்த மூன்று வேளாண் சட்டங்களை, விவசாயிகளின் நலன்களை மனதில் கொண்டு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று நான் கைகளைக் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், பல்வேறு தரப்பிலிருந்தும் கங்கனா ரானாவத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. எக்ஸ் பக்கத்தில் எம். பி கங்கனா ரானாவத்தின் வீடியோவைப் பகிர்ந்த காங்கிரஸ், “மோடியும் அவரது எம்.பி.களும் எவ்வளவு முயன்றாலும் சரி, இந்த கருப்புச் சட்டங்கள் மீண்டும் கொண்டு வரவிட மாட்டோம்” எனக் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, “ விவசாயிகளின் நலன் கருதி ரத்து செய்யப்பட்ட விவசாயச் சட்டங்களை திரும்பக் கொண்டு வர வேண்டும் என்ற எம்.பி கங்கனா ரனாவத்தின் சர்ச்சைக்குரிய அறிக்கையிலிருந்து பாஜக விலகிக்கொள்கிறது. விவசாய மசோதாக்கள் மீதான பா.ஜ.க-வின் பார்வையை அது சித்தரிக்கவில்லை. இது அவரது தனிப்பட்ட கருத்து என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். பா.ஜ.க சார்பில் இதுபோன்ற அறிக்கையை வெளியிட அவருக்கு அதிகாரம் இல்லை. இந்த அறிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு முன் கங்கனா ரனாவத் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில்,“மத்திய அரசின் புதிய வேளாண்மைச் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது மோடி அரசின் வலுவான நடவடிக்கைகள் இல்லாவிட்டால், இந்தியாவை வங்காளதேசத்தில் நடந்தது போன்ற சூழலை உருவாக்கியிருப்பார்கள். அந்தப் போராட்டத்தின் போது தூக்கிலிடுதலும், பாலியல் வன்கொடுமைகளும் நடந்தன. அந்த சட்டங்கள் திரும்பப் பெறப்பட்ட பிறகும் போராட்டங்கள் தொடர்ந்ததற்கு வெளிநாட்டு சதிகள்தான் காரணம்.” எனக் கடுமையாக பேசினார்.
அந்த விவகாரமும் விவாதமான நிலையில், அப்போதும் பாஜக, “மாண்டி எம்.பி கங்கனா ரனாவத், எரிச்சலூட்டும் அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். விவசாயிகளைப் பற்றிப் பேசுவது கங்கனாவின் துறை அல்ல. கங்கனாவின் அறிக்கை அவரின் தனிப்பட்ட கருத்து.” எனக் கூறி ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த விவகாரமும் சர்ச்சையாகியிருக்கிறது.