`ஹிஸ்பொல்லா மனிதர்களை கேடயமாகப் பயன்படுத்துகிறது, எனவே…’ – லெபனான் மக்களை எச்சரிக்கும் நெதன்யாகு

லெபனானில் இஸ்ரேல் நடத்தியுள்ள தாக்குதல் உலக அளவில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 2006-ம் ஆண்டுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள மிகப் பெரிய தாக்குதல் இது.

திங்கள்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 492 பேர் இறந்துள்ளனர். இதில் 90 பேர் பெண்களும் குழந்தைகளும் எனக் கூறியுள்ளது லெபனான் அரசு.

லெபனானில் ஹிஸ்பொல்லா குழுவினர் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 30-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர், 3,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலைக் குற்றம்சாட்டியது ஹிஸ்பொல்லா.

பேஜர் வெடிப்புக்குப் பொறுப்பேற்காத இஸ்ரேல், “போரின் புதிய கட்டத்தில் இருக்கிறோம்” எனத் தெரிவித்தது.

பேஜர் வெடிப்புக்குப் பிறகு இரண்டு படையினரும் மாறி மாறித் தாக்குதல் மேற்கொண்டனர். இஸ்ரேல் திங்கள்கிழமை தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

நெதன்யாகு

கொடூரமான தாக்குதலுக்குப் பிறகு லெபனான் மக்களுக்குச் செய்தியைப் பதிவிட்டுள்ளார், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.

“லெபனான் மக்களுக்கு நான் கூறிக்கொள்கிறேன். இஸ்ரேலின் போர் உங்களுடன் இல்லை, ஹிஸ்பொல்லாவுடன். நீண்டகாலமாக ஹிஸ்பொல்லா மனிதர்களைக் கேடயமாகப் பயன்படுத்தி வருகிறது.

ஹிஸ்பொல்லா உங்கள் வீட்டின் முகப்பறையில் ராக்கெட்டையும் உங்கள் கேரேஜில் ஏவுகனைகளையும் வைத்திருக்கிறது. அந்த ஏவுகணைகள் நேரடியாக எங்கள் மக்களைக் குறிவைத்திருக்கிறது. எங்கள் மக்களை ஹிஸ்பொல்லாவிடம் இருந்து காப்பாற்ற நாங்கள் அந்த ஆயுதங்களை வெளியில் எடுக்க வேண்டும்.

ஹிஸ்பொல்லா உங்கள் வீட்டை ஆபத்துக்குள்ளாக்க அனுமதிக்காதீர்கள். லெபனானை ஆபத்துக்குள்ளாக்க அனுமதிக்காதீர்கள். இப்போது ஆபத்தான பகுதிகளிலிருந்து வெளியேறுங்கள். எங்கள் ஆபரேஷன் முடிந்த பிறகு நீங்கள் பாதுகாப்பாக உங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியும்.” எனக் கூறியுள்ளார்.