RN Ravi: “நம் நாடு என்றைக்கும் மதச்சார்பற்ற நாடுதான், ஆனால்…” – ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறில் வெள்ளிமலை இந்துதர்ம வித்யாபீடம் சார்பில் நடைபெற்ற வித்யாஜோதி மற்றும் வித்யாபூஷன் பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரம தலைவர் சுவாமி சைதன்யானந்தஜிமகராஜ் தலைமை வகித்தார். தேர்வுகளில் வெற்றிபெற்றவர்களுக்கு கேடையம் மற்றும் சான்றிதழ்களை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.

அதைத்தொடர்ந்து அவர் பேசுகையில், “திருவட்டாறு ஆதிகேசவனை தரிசிக்க வருவது என்னைப்பொறுத்தவரைப் புனித பயணம். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதுகலைப் பட்டத்தைப் போன்ற வித்யாஜோதி பட்டத்தையும், பி.ஹெச்டி போன்ற வித்யாபூஷன் பட்டத்தையும் முதன் முறையாக வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்துதர்மம்தான் பாரதத்தை உருவாக்கியது. பாரதம் இந்து தர்மம் ஆகியவைப் பிரிக்க முடியாதது. ஆயிரம் ஆண்டுகளாக அயலாரின் ஆட்சியில் நம் தர்மத்தை அழிக்கும் அத்தனை முயற்சியையும் செய்தார்கள். அதையெல்லாம் கடந்து நாம் வந்திருக்கின்றோம். நமது சனாதன தர்மம் அழிக்க முடியாதது.

வித்யாஜோதி பட்டமளிப்புவிழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி

சனாதன தர்மம் அடிப்படையில் எளிமையானது. பல தெய்வங்களை வழிபடுகிறோம். அதை வைத்து சிலர் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். இந்த சிக்கலான விஷயம் தேவைதான். அப்போதுதான் விளக்கம் சொல்ல முடியும். எல்லோரும் விளக்கம் சொல்லத் தயாராக வேண்டும். அதிலும் இளைய சமூகத்தினர் அதை விளக்கிக் கூற தயாராக வேண்டும்.

இறைவனின் பரமாத்மாவாக நாம் பரிணமித்துக் கொண்டிருக்கிறோம். நாம் ஒரே குடும்பம் என நம்புகிறோம். அதனால்தான் என் கடவுள், என் வழிபாடு சிறந்தது என நாம் கூறுவது இல்லை. கடவுள் ஒருவரே அவரைப் பல்வேறு வடிவத்தில் வழிபடுகிறோம் என்பது நம் கொள்கை. அதனால்தான் அனைத்து வழிபாடுகளும் ஒன்றுதான் என ஏற்றுக்கொள்கிறோம். மக்கள் தங்களுக்குப் பிடித்த உணவை உண்டு, பிடித்த வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். நமக்குப் பிடித்த இறை வழிபாட்டை மேற்கொள்ளலாம் என்பது சனாதன தர்மம். வேறு எந்த மதமும் சொல்ல முடியாத, எல்லா இடங்களிலும் இறைவன் இருக்கிறார் என்ற கருத்தை நாம் கூறுகிறோம். அதனால்தான் பாரதம் என்ற மிகப்பெரிய நாடு உருவானது. சனாதன தர்மம் என்பது மதம் அல்ல வாழ்க்கை முறை.

ஆயிரம் ஆண்டுகளாகச் சில புதியவர்கள் வந்தார்கள். அவர்கள் எங்கள் மதம்தான் சிறந்தது நீங்கள் இங்கே வரவேண்டும் எனச் சொன்னார்கள். கோயில்களை அழித்தார்கள். ஆனாலும் சனாதன தர்மத்தை அழிக்க முடியவில்லை. முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் ஒன்றன்பின் ஒன்றாக நம் நாட்டுக்கு வந்து சனாதன தர்மத்தை அழிக்க முயன்றார்கள். சுதந்திரத்துக்குப் பின் நம் தர்மம் எழுச்சி பெறும் என நினைத்தோம். துரதிஸ்டவசமாக அது நடக்கவில்லை. இந்தியாவில் பிரிட்டீஸ் ஆட்சியில் அவர்களுடன் சேர்ந்து மிஷனரிகளும் பல வேலை செய்தார்கள்.

கவர்னர் ஆர்.என்.ரவிக்கு நினைவு பரிசு வழங்கிய சுவாமி சைதன்யானந்தஜி மஹராஜ்

அப்போதுதான் சுவாமி விவேகானந்தர் அவதரித்தார். கன்னியாகுமரியில் தவம் செய்த சுவாமி விவேகானந்தர், பின்னர் சிகாகோவில் பாரதம் வலிமையானதாக இருக்க வேண்டும். பாரதத்தில் இருப்பவர்கள் வலிமையானவர்களாக இருக்க வேண்டும் எனப் பேசினார். அதன் பிறகுதான் பாரதம் எவ்வளவு பெரிய நாடு என உலகம் உணர்ந்துகொண்டது. வித்யாஜோதிகளையும், வித்யாபூஷன் பட்டம் பெற்றவர்களையும் கடமை அழைக்கிறது. இது ஒய்வெடுக்கும் நேரம் அல்ல. அனைவரையும் வலிமைப்படுத்துங்கள். தர்மம் தாழ்ந்தால் நாடு தாழ்ச்சி அடையும். மனிதர்களைச் சக்தி உள்ளவர்களாக மாற்ற வேண்டியது உங்கள் கடமை என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

வெளிநாட்டவர்கள் இந்தியாவிலிருந்து சென்றபின் நம் ஆட்சியாளர்கள் நம்மைப் பலப்படுத்துவார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால், அவர்கள் நம்மைப் பலவீனப்படுத்தினார்கள். சுதந்திரத்தின்போது நாம் பொருளாதாரத்தில் 6-வது இடத்திலிருந்தோம். கடந்த பத்து ஆண்டுக்கு முன் 11 வது இடத்துக்குப் பின் தள்ளப்பட்டோம்.  கடந்த பத்து ஆண்டுகளாக மத்தியில் சனாதான ஆட்சியில் பொருளாதாரத்தில் 5-வது இடத்துக்கு வந்துள்ளோம். இன்னும் சிறிது காலத்தில் 3 வது இடத்துக்கு வர உள்ளோம். உலக அளவில் மக்கள் தொகையிலும், வலிமையிலும் நாம் முன்னேற்றம் அடைந்துள்ளோம். இன்று அனைத்துக்கும் பாரதத்தை உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. பிரச்னைகளுக்குப் பாரதம் தீர்வு தரும் என நினைக்கிறார்கள். நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்துள்ளோம். 25 கோடி மக்களை வறுமைக்கோட்டுக்கு மேல் கொண்டுவந்துள்ளோம். 

பட்டம் பெற்றவர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி

யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதை வசுதைவ குடும்பகம் எனப் பிரதமர் சொல்லுகிறார். பாரதம் நாடு அல்ல நம் தாய், நம் தேவி. பாரதத்துக்காகச் சேவை செய்ய வேண்டும். அதற்காகத்தான் பாரதியார் இந்த நாட்டை தெய்வமென்று கும்பிடடி பாப்பா எனப் பாடினார். சில சக்திகள் நம்மைப் பலவீனப் படுத்த, பிரிக்கத் தொடர்ந்து வேலை செய்து வருகிறார்கள். சிலர் இது என் மொழி எனச் சொல்லுகிறார்கள். அதற்காகத்தான் பாரதியார், செப்பும்மொழி பதினெட்டுடையாள் சிந்தனை ஒன்றுடையாள் எனப் பாடியுள்ளார். மொழியை வைத்து எங்களைப் பிரிக்க முடியாது. வெள்ளைக்காரர்கள் சென்ற பின் பல ஏமாற்று வேலைகள் இங்கு அரங்கேறின. தவறான கோட்பாடுகள் நமக்குச் சொல்லப்பட்டன. அதில் முக்கியமானது மதச்சார்பின்மை என்பதாகும். பாரதத்தின் அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள், அரசியல் அமைப்பு சட்டத்தை எழுதும்போது அரசியல் சாசனத்தில் மதச்சார்பின்மை என்ற வார்த்தை கொண்டுவர வேண்டுமா என்ற பேச்சு வந்தது.

மதச்சார்பின்மை என்பதை நமக்குச் சொல்லித்தர வேண்டுமா எனச் சொல்லி சிலர் சிரித்தார்கள். மதச்சார்பின்மை என்ற வார்த்தை நமது அரசியல் சாசனத்தில் இடம்பெறவே இல்லை. 25 ஆண்டுகளுக்குப் பிறகு அவசரக்கால நிலை அமல்படுத்தப்பட்டபோது, சில சமுதாயத்தை திருப்திப்படுத்துவதற்காக மதச்சார்பின்மை என்ற வார்த்தை சொருகப்பட்டது. நாடாளுமன்ற விவாதத்தின்போது அதை அறிமுகப்படுத்தியவர்கூடச் சொன்னார், நம் நாட்டில் உள்ள செக்குலரிசம் என்பது ஐரோப்பாவில் உள்ள செக்குலரிசம் அல்ல.

கவர்னர் ஆர்.என்.ரவி.

ஐரோப்பிய செக்குலரிசம் என்பது ஐரோப்பிய ஆட்சியாளர்களுக்கும், அங்குள்ள மதம் சார்ந்தவர்களுக்கும் உள்ள பிரச்னையை தீர்க்கும் விதமாகக் கொண்டுவரப்பட்டது. உன்னுடைய பங்கை நீ வைத்துக்கொள், என்னுடைய பங்கை நான் வைத்துக்கொள்கிறேன் என்பதுதான் ஐரோப்பிய நாட்டு செக்குலரிசம். அதை நம் நாட்டில் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று சொன்னார்கள். நமது நாடு தர்மத்தின் அடிப்படையிலான நாடு. தர்மத்தின் அடிப்படையில் அனைவரும் சமம். சர்வ மத சமத்துவம்தான் உண்மையான மதச்சார்பின்மை.