Dubai: துபாயில் சர்வதேச அறிவுத்திறன் விளையாட்டு ஒலிம்பிக்ஸ்; 64 தமிழக மாணவர்கள் தேர்வு!

துபாயில் நடைபெறும் சர்வதேச அறிவுத்திறன் விளையாட்டு ஒலிம்பிக் போட்டிக்கு (The World Mental Sports Olympics) தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராமப்புறப் பள்ளி மாணவர்கள் உட்பட 64 பேரை அழைத்துச் செல்கிறது மதுரையிலிருந்து செயல்படும் பிரைனி பாப்ஸ் என்ற நிறுவனம்.

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழகத்தின் 17 மாவட்டங்கள், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும், உலகின் 36 நாடுகளில் கிளைகள் பரப்பி, அங்குள்ள தமிழ் மாணவர்களுக்கு அபாகஸ் கல்வியை வழங்கி வருகிறது இந்த ‘பிரைனி பாப்ஸ் இன்டர்நேஷனல் அட்வான்ஸ் அபாகஸ்’ நிறுவனம்.

அறிவுத் திறன் விளையாட்டு

அமெரிக்காவிலுள்ள மெமோரியாட் (MEMORIAT) எனும் நிறுவனம் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அனைத்து நாட்டு மாணவர்களையும் பங்குபெற வைத்து ‘வேர்ல்ட் மெண்டல் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பிக்ஸ்’ என்ற பெயரில், அறிவுத்திறனைப் பரிசோதிக்கும் போட்டிகளை நடத்துகிறது. இந்தாண்டு இந்த போட்டியை ஆசிய நாடுகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டு வரும் செப்டம்பர் மாதம் 29-ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது.

முதல் முறையாக இந்திய மாணவர்களைத் தேர்வு செய்து அழைத்து வரும் பொறுப்பானது, பிரைனி பாப்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பிரைனி பாப்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி ஜோதிபாசு, “இந்த ஒலிம்பிக்ஸ் போட்டிக்காகக் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கின. கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தின் 17 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும், பக்கத்து மாநில மாணவர்களும் பங்கு பெற்ற முதலாவது சுற்றுப் போட்டியில் 740 மாணவர்கள் பங்கு பெற்ற அதிலிருந்து 220 மாணவர்கள் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.

ஜோதிபாசு

இரண்டாவது சுற்றுக்கு மாணவர்களைப் பயிற்சி கொடுத்து தயார்ப்படுத்தி ஆகஸ்ட் மாதம் 27 முதல் 31 வரை 6 இடங்களில் நடைபெற்ற போட்டியில் 213 மாணவர்கள் தகுதி பெற்றனர்.

துபாய் சென்று வர ஆகும் செலவுகளைக் கருத்தில் கொண்டும், பல்வேறு காரணங்களாலும் தமிழ்நாட்டிலிருந்து தற்பொழுது 64 மாணவர்கள் மட்டுமே துபாயில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர். அகில இந்திய அளவில் இந்த 64 மாணவர்கள் மட்டுமே இந்தியாவின் சார்பாகப் பங்கேற்க உள்ளனர். இதில் பெரும்பாலும் கிராமப்புற மற்றும் சிறுநகரங்களைச் சேர்ந்த மாணவர்களே அதிகம்.

ஆகஸ்ட் மாதம் நடந்த போட்டியில் முதலாவதாக வந்த 10 மாணவர்களுக்குத் துபாயில் நடைபெறும் போட்டியில் நுழைவு கட்டணம் இல்லாமல் பங்கேற்கவும், விமான டிக்கெட் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் எங்கள் நிறுவனமே ஏற்றுள்ளது. அதே நேரம் சில மாணவர்களுக்குப் பெற்றோர் அல்லது உறவினரில் ஒருவரை அழைத்துச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் உதவிக்கு நன்கொடையாளர்களிடம் கோரிக்கை வைத்து வருகிறோம். நாங்கள் அழைத்துச் செல்கிற நம் மாணவர்கள் துபாய் போட்டியில் வெற்றி பெற்று வந்தால் தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை.” என்றார்.