“தனிமையில் குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பார்ப்பது குற்றமாகாது” என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது உச்சநீதிமன்றம்.
சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞர், தனது மொபைல்போனில் குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்து பார்த்து வந்ததற்காக, அவர் மீது போக்சோ வழக்குப் பதியப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் , “தனிமையில் குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பார்ப்பது குற்றமாகாது” என்று தெரிவித்து, அந்த நபரை விடுதலை செய்தார்.
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த Just Rights for Children Alliance என்ற அமைப்பும், டெல்லியைச் சேர்ந்த Bachan Bachao Andolan என்ற குழந்தைகளுக்கான அமைப்பும் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை மேல்முறையீடு செய்தனர்.
இதன் மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் கருத்தைக் கடுமையாகக் கண்டித்திருந்தார் தலைமை நீதிபதி சந்திரசூட்.
இந்தநிலையில், ஆனந்த் வெங்கடேசனின் தீர்ப்பை ரத்து செய்துள்ளது உச்சநீதிமன்றம்.
மேலும் குழந்தைகள் தொடர்பான இத்தகைய வழக்குகளில் “குழந்தைகள் ஆபாசப்படம்” என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதற்குப் பதிலாகக் குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் எனப் பயன்படுத்தவும் அறிவுறுத்தியிருக்கிறது.
குழந்தைகளின் ஆபாசப் படங்களை, குழந்தைகளின் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் பொருள் என்று குறிப்பிடும் வகையில் வரையறுக்கும்படி POCSO சட்டத்தில் திருத்தம் கொண்டு வர நாடாளுமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. அத்துடன், நீதிமன்றங்களும் `குழந்தைகள் ஆபாசப்படம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம் என உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.