உலக அளவிலான டெக்னாலஜி ஜாம்பவான்களுடன் இந்தியாவின் இணைப்பை வலுப்படுத்தும் முயற்சியாக அமெரிக்காவின் முக்கிய சி.இ.ஓ-களுடன் வட்ட மேசை உரையாடலில் கலந்துகொண்டார் பிரதமர் மோடி.
இந்த வட்ட மேசை உரையாடலில் சுந்தர் பிச்சை (கூகுள்), அரவிந்த் கிருஷ்ணா (ஐபிஎம்), சாந்தனு நாராயணன் (அடோப்), ஜென்சென் ஹஆங் (என்விடியா), லிசா சு (ஏஎம்டி) உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அமெரிக்க – இந்திய சி.இ.ஓ-க்களை பெருமைப்படுத்தும் விதமாக, “AI என்றால் Artificial Intelligence என்று அர்த்தம். ஆனால் என்னைப் பொறுத்தவரை AI என்றால் American – Indian. இதுதான் உலகின் புதிய AI சக்தி. இந்த சக்தியைத்தான் நாம் வலுப்படுத்த வேண்டும்” என்று பேசினார்.
அந்த உரையாடலில் ” இந்தியா தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஜனநாயகப்படுத்தியுள்ளது, அதன் மூலம் பிளவுகளைக் குறைக்கிறது. AI பயன்பாட்டை நெறி முறைப்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது” எனப் பேசியுள்ளார்.
AI, செமி கண்டக்டர்கள், குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் பயோடெக்னாலஜி போன்ற வளர்ந்துவரும் டெக்னாலஜிகளை இணைந்து செயல்படுத்துவது பற்றி விவாதிப்பதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாக இருந்தது.
செமி கண்டக்டர்கள் உற்பத்தியில் உலகளாவிய மையமாக இந்தியா திகழ வேண்டுமென்ற இலக்கைச் சுட்டிக்காட்டினார் பிரதமர். தொழில் நுட்பத்துறையில் வளர்ச்சிபெறுவதற்கான இந்தியாவின் முயற்சிகளைப் பற்றிப் பேசினார்.
AI for All என்ற முன்னெடுப்பின் மூலம் இந்தியாவில் அனைவரும் நெறிமுறைகளைப் பின்பற்றி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நோக்கத்தை வலியுறுத்தினார்.
இந்த உரையாடல் குறித்து எக்ஸ் தளத்தில், “தொழில்நுட்பம், புதிய உருவாக்கங்கள் பற்றிய பயனுள்ள உரையாடலை மேற்கொண்டோம். தொழில்நுட்பத் துறையில் இந்தியா மேற்கொண்டுள்ள முன்னேற்றங்களையும் எடுத்துரைத்தேன். இந்தியா மீதான அபரிமிதமான நம்பிக்கையைக் கண்டு மகிழ்கிறேன்” எனப் பதிவிட்டார்.
இந்த உரையாடலில் சி.இ.ஓ-கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தினர்.