விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைப் பூர்வீகமாகக் கொண்டவர் எஸ்.வி.சங்கரலிங்கம். விவசாயக் குடும்பம். பொருளாதார வளர்ச்சிக்காக 1930-ம் ஆண்டு மதுரைக்குப் புலம்பெயர்ந்தார். மதுரைக்கு வந்த புதிதில் மொத்தக் கடைகளிலிருந்து மளிகைப் பொருள்கள் வாங்கி, விற்கும் வணிகத்தை செய்து வந்தார். புதிய தொழில்களைத் தொடங்க விண்ணப்பம் செய்யலாம் என்ற அறிவிப்பை பிரிட்டிஷ் அரசாங்கம் வெளியிட்டது. அந்தக் காலகட்டத்தில் உணவுப் பொருள்களுக்கான தேவைகள் அதிகமாக இருந்ததால், எதிர்கால இலக்குடன் யோசித்து அரிசி மில் மற்றும் மாவு மில் தொடங்க விண்ணப்பம் செய்தார் சங்கரலிங்கம்.
1934-ம் ஆண்டு மாவு மில் தொடங்க சங்கரலிங்கத்துக்கு அனுமதி கிடைத்தது. தன்னுடைய சேமிப்புகளைக் கொண்டு மதுரையில் மாவு மில் ஒன்றைத் தொடங்கினார். அந்த மாவு மில் எப்படி எஸ்.வி.எஸ் பிராண்டாக மாறியது, காலத்துக்கேற்ப அதில் நடந்த மாற்றங்கள் என்னென்ன என்பது குறித்து பகிர்கிறார் எஸ்.வி.எஸ் நிறுவனத்தின் இணை இயக்குநர்களில் ஒருவரான சூரஜ் சுந்தர சங்கர்.
“என் கொள்ளுத் தாத்தா சங்கரலிங்கம் ஆரம்பித்த பிசினஸ் இது. 90 வருடங்கள் கடந்த ஒரு பிராண்டின் ஓர் அங்கமாக இருப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது. அதே நேரம், நிறுவனத்தின் பெருமையைக் கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பும் அடுத்தடுத்த தலைமுறையினருக்கு இருக்கிறது. அதனால் நிர்வாகம் சார்ந்து எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் மிகவும் கவனமாக எடுக்கிறோம்.
என் கொள்ளுத் தாத்தா பிசினஸ் செய்த காலத்தில் நாங்கள் பிறக்கவில்லை என்றாலும், அவர் நிர்வாகம் செய்த விதத்தைப் பற்றி எங்கள் குடும்பப் பெரியவர்கள் எங்களுக்கு நிறையவே சொல்லியிருக்கிறார்கள். நிறைய தொழில்கள் செய்த பிறகுதான் கொள்ளுத் தாத்தா, மாவு பிசினஸுக்கு வந்திருக்கிறார். மாவு பிசினஸில் முன் அனுபவம் இல்லை என்றாலும், அவரால் அதில் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால் தொடர்ந்து தரத்தில் மட்டும் கவனம் செலுத்தி இருக்கிறார். அடிக்கடி இடைத்தரகர்களை மாற்றாமல், ஒரே இடைத்தரகரிடம் இருந்து மூலப் பொருள்களை வாங்கியிருக்கிறார். அதனால் தரமும் சுவையும் எப்போதும் ஒரே மாதிரியாக இருந்திருக்கிறது.
தாத்தா தொழில் செய்யத் தொடங்கிய காலத்தில் நிறுவனத்துக்கு பெயர் எல்லாம் வைக்கவில்லை. தாத்தா பெயரைச் சொல்லி எஸ்.வி.சங்கரலிங்கம் மாவுக் கடை என்று வாடிக்கையாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
அந்தக் காலத்தில் கடலை மாவுதான் எங்களுக்குப் பிரதான உற்பத்திப் பொருளாக இருந்திருக்கிறது. 50 கிலோ, 100 கிலோ என மொத்த வியாபாரம் நடந்திருக்கிறது. எனவே, சாக்குகளில் தான் மாவைக் கட்டி விநியோகம் செய்திருக்கிறார்கள். அதனால் சாக்குகளில் தன் பெயர்ச் சுருக்கமான ‘எஸ்.வி.எஸ்’ என்று எழுதி மாவுப் பைகளை விற்பனை செய்துள்ளார் தாத்தா.
1960-களின் இறுதியில் இரண்டாம் தலைமுறையிலிருந்து தாத்தா வி.எஸ்.சுந்தரமூர்த்தி பிசினஸுக்குள் வந்தார். அவர் சட்டம் படித்தவர் என்பதால், கட்டணங்கள், பில் போன்றவற்றை சட்டப்படி செய்யும் வழிமுறைகளை நடைமுறைப் படுத்தினார். ‘எஸ்.வி.எஸ்’ பிராண்ட் பெயரை லோகோ-வுடன் பதிவு செய்தார்.
மேலும், இரண்டாம் தலைமுறையில் தாத்தா செய்த மாற்றங்கள் பிசினஸின் நிலைத் தன்மையை உறுதி செய்தன. அதுவரை கடலை மாவு மட்டும் பிரதானமாக இருந்த பிசினஸில் பட்டாணி மாவு, கோதுமை மாவு போன்றவற்றை அறிமுகம் செய்தார். மேலும், அந்தக் காலத்தில் பிஸ்கட் சின்ன பாக்கெட்டுகளில் பேக் செய்து வருவதைப் பார்த்துவிட்டு மாவுகளை நாம் இப்படி பேக் செய்யலாம் என்று யோசித்து, ஒரு கிலோ, ஐந்து கிலோ என சிறிய அளவு பாக்கெட்டுகளை அறிமுகம் செய்திருக்கிறார். இதனால் சாதாரண மக்கள்கூட தங்களுக்குத் தேவையான அளவுக்கு மாவை வாங்க முடிந்தது.
தாத்தா காலம் தொடங்கி பல ஆண்டுகளாக மாவுடன் கூடிய சாக்குப் பைதான் எங்கள் நிறுவனத்தின் முத்திரையாக இருந்தது. நான் பிசினஸுக்குள் வந்தபிறகு ‘நான்கு தலைமுறை’ என்பதைப் பிரதானப்படுத்தி நிறுவனத்தின் லோகோவை மாற்றினேன். அப்படி லோகோவை மாற்றும்போது அப்பா உட்பட யாருக்கும் பெரிதாக விருப்பம் இல்லை. ஆனால், மாறிவரும் சூழலுக்கேற்ப பாக்கெட் கொஞ்சம் மாடர்னாக இருந்தால், நன்றாக இருக்கும் என்ற நோக்கத்தைப் புரியவைத்தோம்.
1980-களில் மூன்றாம் தலைமுறையினரான என் அப்பா வேல்சங்கர் பிசினஸுக்குள் வந்தார். அப்பா காலகட்டத்தில் பிசினஸ் அடுத்த கட்ட வளர்ச்சியை அடைந்தது. அந்தக் காலத்தில் நிறைய போட்டிகளும் வரத்தொடங்கின. அதனால் அப்பா மார்க்கெட்டிங் மற்றும் விற்பனையில் அதிக கவனம் செலுத்தினார்.
அரசுப் பொருள்காட்சியில் ஸ்டால்கள் அமைத்து விளம்பரம் செய்தது, சிலோன் ரேடியோவில் விளம்பரம் செய்தது, கடைகளில் ஸ்டிக்கர்கள் மூலம் விளம்பரம் செய்தது என அப்பா எங்களுடைய பிராண்டை தமிழகம் முழுவதும் தெரியச் செய்தார். எங்களிடம் மொத்த அளவில் மாவுகளை வாங்கி சில்லறைகளில் விற்ற வணிகர்கள்கூட அப்பாவின் மார்க்கெட்டிங் உத்தியால் எங்களின் மாவு பாக்கெட்டுகளை மக்களுக்குப் பரிந்துரை செய்ய ஆரம்பித்தனர்.
மூலப்பொருள்கள் தரத்திலும் தொடர்ந்து கவனம் செலுத்தினார் அப்பா. மூலப்பொருள்கள் எங்களின் தொழிற்சாலைக்கு வந்ததும், அவற்றின் தரத்தை சோதித்து, அதன் பின்னரே தயாரிப்புப் பணிகளுக்கு அனுப்ப வேண்டும் என்ற வரைமுறையைக் கொண்டு வந்தார். மேலும், எங்களின் பொருள்களுக்கு அக்மார்க் தரச் சான்றுகளை வாங்கி, கூடுதல் பலம் சேர்த்தார்.
நானும் என் தம்பி சர்வேஷும் நான்காம் தலைமுறையினர். நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்தே பிசினஸில் என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்கத் தொடங்கினேன். மாவு தயாரிப்பு, பேக்கிங், குவாலிட்டி செக்கிங் என எல்லாவற்றையும் சிறுவயதிலேயே கற்றுக்கொண்டேன். எம்.பி.ஏ படிப்பு முடித்து நிர்வாகத்தில் இணைந்தேன். அப்பா மார்க்கெட்டிங்கில் கவனம் செலுத்தியதால், என் கவனமும் அதில்தான் இருந்தது. நான் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தினேன்.
இப்போது 10 வகையான மாவுப்பொருள்களைத் தயார் செய்கிறோம். சீஸனுக்குத் தகுந்தாற்போல் மாவுப்பொருள் தயாரிப்புப் பணிகளைக் கூடுதலாகவோ, குறைத்தோ செய்துகொள்வோம். அடுத்தபடியாக சிறுதானிய மாவுகள் தயாரிக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளோம்.
ஒரு பொருளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்யும்முன் நண்பர்கள், உறவினர்களுக்குக் கொடுத்து கருத்து கேட்போம். அதன்பின் எங்கள் லோகோ இல்லாத பாக்கெட்டுகளில் மாவுகளை அடைத்து, சில கடைகளில் கொடுத்து விற்பனை செய்து வாடிக்கையாளர்களின் கருத்து கேட்போம். அடுத்தபடியாக, எங்களின் மற்ற மாவு பாக்கெட்டுகளுடன் புதுப் பொருளை வாடிக்கையாளர்களுக்கு விலையில்லா சாம்பிளாகத் தருவோம். இதனால் தொடர்ந்து வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும் முடிகிறது.
இப்போது அமெரிக்கா, கத்தார் போன்ற நாடுகளுக்கு முகவர்கள் மூலம் விற்பனை செய்கிறோம். மாதம் 500 டன் மாவுகள் விற்பனை செய்கிறோம். வருடத்துக்கு 300 கோடி டேர்ன்ஓவர் செய்யும் நிறுவனமாக வளர்ந்துள்ளோம்” என்றார் சூரஜ்.