இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (21-09-2024) மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. மதியத்துக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, இலங்கையின் புதிய அதிபர் யார் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, புதிய அதிபர் யார் என்பது குறித்த நிலவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள விகடனுடன் இணைந்திருங்கள்…!
அநுர குமார திஷநாயக – 40.27 %
சஜித் பிரேமதாசா – 32.75 %
ரணில் விக்ரமசிங்கே – 17.32%
அரியநேந்திரன் – 3.88 %
நிமல் ராஜபக்சே – 2.39 %
சுண்டு விரலால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய இலங்கை மக்கள்! புதிய அதிபராகிறாரா அநுர குமார திஸாநாயக்க?
வெறிச்சோடி கிடக்கும் இலங்கை வீதிகள்
இலங்கையில் நேற்று அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நாளான இன்று ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் எப்போதும் பரபரப்பாக இயங்கும் இலங்கையின் முக்கிய சாலைகளில் ஒன்றான கால் ஃபேஸ் (Galle face) சாலை தற்போது போக்குவரத்து ஏதுமில்லாமல் ஆள் அரவமற்றிருக்கிறது.
இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுர குமார திஷநாயக. இருப்பினும், அவரின் வாக்கு 50 சதவிகிதத்திலிருந்து குறைந்து கொண்டே வருகிறது. தற்போது அநுர குமார திஷநாயக 44.43 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறார். இலங்கை தேர்தல் விதிப்படி ஒருவர் அதிபராக வேண்டுமென்றால் 50 சதவிகித வாக்குகளுக்கும் அதிகமாக பெற்றிருக்க வேண்டும். இறுதிச் சுற்று வரை அநுர குமார திஷநாயக 50 சதவிகிதத்தைத் தொடவில்லை என்றால் ‘Instant Runof Method’ முறைப்படி இரண்டாவது முன்னுரிமை வாக்குகள் எண்ணப்படும்.
அநுர குமார திஷநாயக – 44.43 %
சஜித் பிரேமதாசா – 31.2 %
ரணில் விக்ரமசிங்கே – 15.19%
அரியநேந்திரன் – 4.6 %
அநுர குமார திஷநாயக முன்னிலை:
தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளரான அநுர குமார திஷநாயக இதுவரை 51.81 விழுக்காடுகளுக்கும் மேலான வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். ரணில் விக்ரமசிங்கே, சஜித் பிரேமதாசா ஆகியோர் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர். தமிழ் அமைப்புகள் சார்பில் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட அரியநேந்திரன் 4வது இடத்தில் இருக்கிறார். 5வது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார் முன்னாள் அதிபர் ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச. இந்நிலையில் அநுர குமார திஷநாயகவிற்கு அதிபராகும் வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன. மூத்த தலைவர்கள் பலரும் அநுர குமார திஷநாயகவிற்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
அநுர குமார திஷநாயக – 51.81%
சஜித் பிரேமதாசா – 21.73%
ரணில் விக்ரமசிங்கே – 19.42%
இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றிலேயே மிக அதிகமான வேட்பாளர்கள் (38 வேட்பாளர்கள் களத்தில்) போட்டியிடும் தேர்தலாக விளங்கும் இந்த 2024 அதிபர் தேர்தல் பார்க்கப்படுகிறது. இலங்கையின் புதிய அதிபர் யார் என்ற எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில், தற்போதைய இடைக்கால அதிபராக இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சஜித் பிரேமதாசா, இடதுசாரி சிங்கள இனவாத கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன(ஜே.வி.பி) சார்பில் அனுரகுமார திசநாயக்க, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் மகிந்த ராஜபக்சேவின் மகனான நிமல் ராஜபக்சே, விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின்போது இலங்கையின் ராணுவத் தளபதியாக செயல்பட்ட சரத் பொன்சேகா, மக்கள் போராட்டக் கூட்டணி சார்பில் வழக்கறிஞர் நுவான் போபகே உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் போட்டியிடுகின்றனர். இருப்பினும் ரணில் விக்ரமசிங்கே, சஜித் பிரேமதாசா, அனுரகுமார திசநாயக்க ஆகிய மூவருக்குள்தான் மும்முனை போட்டி நிலவுகிறது.