கிறிஸ்டியானா பார்சோனி-ஆர்சிடியாகோனோ, இத்தாலி-ஹங்கேரிய சி.இ.ஓ. ஹங்கேரியை தலைமையிடமாகக் கொண்ட இவரது பிஏசி கன்சல்டிங் நிறுவனம், லெபனானில் 12 பேர் மரணத்துக்குக் (2,000 பேர் காயம்) காரணமாக இருந்த பேஜர்கள் தயாரிப்பில் சம்பந்தப்பட்டிருக்கிறது.
கோல்ட் அப்போலோ என்ற தைவானைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் பேஜர்களைத் தயாரித்தது. பிஏசி நிறுவனம் தைவான் நிறுவனத்திடம் இருந்து பேஜர் வடிவமைப்புக்கு உரிமம் பெற்றுள்ளது. பேஜர் விவகாரத்தில் தனது நிறுவனத்தின் தலையீடு இல்லை என கிறிஸ்டியான மறுத்துள்ளார்.
லெபனான் பேஜர் வெடிப்பு சம்பவத்துக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. எனினும், இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் தான் இதைச் செய்ததாகக் குற்றம்சாட்டுகிறது லெபனான்.
49 வயதாகும் கிறிஸ்டியானா 7 மொழிகளில் பேசக் கூடிய திறன் பெற்றவர். பார்டிகள் பிசிக்ஸ் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். மனிதாபிமான செயல்பாடுகளில் ஈடுபடும் இவர் ஐ.நாவிலும் பணியாற்றியிருக்கிறார்.
மனிதாபிமான சேவைகளுக்காக ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மத்தியக் கிழக்கு நாடுகளுக்குப் பயணித்திருக்கிறார்.
கிறிஸ்டியானாவின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்ததும் என்.பி.சி ஊடகத்துக்குப் பேட்டியளித்த அவர், “நான் ஒரு மத்தியஸ்தர் மட்டும்தான், நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள்.” எனக் கூறினார். அதன்பிறகு கிறிஸ்டியானாவை யாருமே பார்க்கவில்லை. அவரது வீடு பூட்டியே இருக்கிறது. அவர் இருக்கும் இடம் பற்றிய தகவல்கள் யாருக்கும் தெரியவில்லை.
ஐ.நாவின் முன்னாள் நிர்வாகியான Kilian Kleinschmidt, டச்சு நிதியுதவியால் துனிசியாவில் செயல்படும் ஒரு திட்டத்துக்காக கிறிடியானா பார்சோனி-ஆர்சிடியாகோனோவைப் பணியமர்த்தியிருக்கிறார். மேலும் கிறிஸ்டியானாவைப் பணியமர்த்தியது தனது வாழ்க்கையில் நான் செய்த மிகப் பெரிய தவறு என்றும் கூறியிருக்கிறார்.
கிறிஸ்டியானா, சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) திட்ட மேலாளர், நியூயார்க்கின் எர்த் சைல்ட் இன்ஸ்டிடியூட் வாரிய உறுப்பினர், IAEA பயிற்சியாளர், எர்த் சைல்ட் இன்ஸ்டிடியூட் என ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல வேலைகளைச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் பார்டிகல் பிசிக்ஸில் முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும் அறிவியல் சார்ந்த துறைகளில் அவர் பணியாற்றவில்லை.
BAC நிறுவனத்தின் வலைத்தளத்தில் இருந்த கிறிஸ்டியானாவின் சி.வி (CV) தற்போது நீக்கப்பட்டுள்ளது.
லெபனான் வெடிப்பு குறித்து விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், தலைமறைவாகியிருக்கும் கிறிஸ்டியானாவின் நிறுவனத்தின் எதிர்காலமும் கேள்விக்குறியாக உள்ளது.