சேலம் கருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல். கடந்த அதிமுக ஆட்சியின்போது ஒமலூர் தொகுதி எம்எல்ஏ-வாக இருந்தார்.
இந்நிலையில் தற்போது கட்சியில் சில பொறுப்புகளில் இருந்து வரும் இவர் குறித்து, ஒமலூர் வட்டாரங்கள் முழுவதும் அவருடைய புகைப்படம் போட்டு சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், “கொல்லிமலை புகழ் மாந்திரீக சக்கரவர்த்தி சித்தர் ஸ்ரீ கருப்பூர் வெற்றிவேல் சுவாமிகள் மக்களுக்காக அனைத்து விதமான பில்லி சூனியம் ஏவல் செய்வினை போன்ற சகல வித்தைகளையும் தனது கைதேர்ந்த சிஸ்யர்களால் செய்துதரப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்களது விவரங்கள் ரகசியமாக பாதுகாத்து வைத்துக்கொள்ளப்படும் என்று அவருடைய புகைப்படம், வீட்டு முகவரி, செல்போன் எண்கள் போட்டு சுமார் 1000 போஸ்டர்கள் ஓமலூர் சுற்றுவட்டாரங்கள் முழுவதும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் எந்த மர்ம நபர் இந்த போஸ்டரை ஒட்டியது என்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அரசியலில் உள்ள பூசல் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ஓமலூர் முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேலிடம் பேசியபோது, “எனக்கே இப்போது தான் தெரியபடுத்தினார்கள். நான் வெளியூரில் இருக்கிறேன் ஊருக்கு வந்துதான் என்னவென்று விசாரிக்க வேண்டும்” என்றார்.