Sri Lanka Elections : இலங்கை அதிபர் தேர்தல்… களத்திலிருந்து விகடன் Live Reporting!

வாக்குப்பதிவு தினமான இன்று… வாக்குப்பதிவு நிலவரம், அரசியல் தலைவர்கள் கருத்துகள், லைவ் வீடியோக்கள், புகைப்படத் தொகுப்புகள் என `360 டிகிரியில்’ இலங்கை தேர்தல் குறித்த தகவல்களை உங்களிடம் கொண்டு சேர்க்கவிருக்கிறோம்! இலங்கை தேர்தல் தொடர்பான உங்கள் சந்தேகங்கள் மற்றும் கருத்துகளை எங்களிடம் கமென்ட்டில் தெரிவியுங்கள்… இலங்கையில் முகாமிட்டிருக்கும் எங்கள் நிருபர் குழுவுடன் இணைந்து, உங்களுக்குப் பதிலளிக்கிறோம்!

இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகள் மட்டுமன்றி பெரும்பாலான உலக நாடுகளின் கவனம் இன்று இலங்கை என்ற தீவு நாட்டின் மீது குவிந்திருக்கிறது. பெரும் பொருளாதார நெருக்கடி, அரசியல் அதகளங்கள் என கடந்த சில ஆண்டுகளாகவே இலங்கையில் அசாதாரண சூழல் நிலவிக் கொண்டிருக்கிறது. இத்தகைய நிலையில், தற்போது நடைபெறும் அதிபர் தேர்தலானது, மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. நீராலான தேசம் தன்னை மீட்டெடுப்பதற்கான தருணத்தை எதிர்நோக்கும் தேர்தல் என்றே கூற வேண்டும்.

இலங்கையைத் திணறடித்த அரசியல், பொருளாதார நெருக்கடிகள்!

2019-ம் ஆண்டு இலங்கைத் தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த ராஜபக்சே சகோதரர்களின் அரியனை முழுதாய் மூன்று ஆண்டுகள்கூட நீடிக்கவில்லை. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்துவந்து, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்ற புதிய கட்சியைத் துவங்கிய மகிந்த ராஜபக்சே, 2019 இலங்கை அதிபர் தேர்தலில் தனது தம்பியான கோத்தபய ராஜபக்சேவை போட்டியிடவைத்தார். அந்தத் தேர்தலில் தன்னை எதிர்த்துப்போட்டியிட்ட சஜித் பிரேமதாசவைத் தோற்கடித்து பெரும்பான்மை வெற்றியுடன் அதிபர் பதவியேற்றார் கோத்தபய ராஜபக்சே.

இலங்கை அதிபர் தேர்தல் SriLanka

தான் வெற்றிபெற்றை கையோடு அடுத்துவந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனது அண்ணன் மகிந்த ராஜபக்சேவை பிரதமராக்கினார் கோத்தபய. மீண்டும் இலங்கையின் ஆட்சி அதிகாரம் தங்கள் குடும்பத்தின் கைக்கு வந்த களிப்பில் இருந்த ராஜபக்சே சகோதரர்களின் ஆட்சியை ஆட்டம்காண வைக்க வந்தது கொரோனோ பெருந்தொற்று.

அதைத் தொடர்ந்து இலங்கையில் அரங்கேறிய அரசியல் அதகளங்கள், களேபரங்கள் அனைத்தும் நீங்கள் அறிந்தவையே… பொருளாதார நெருக்கடி நிலை, விண்ணை முட்டிய விலைவாசி உயர்வு, ஆட்சியாளர்கள் மீதான வெறுப்பு ஆகியவை மக்களை வீதியில் இறங்கிப் போராட தூண்டின. வெகுஜன போராட்டத்தால் ஆட்டம் கண்ட அரசு இயந்திரம், செயலிழந்து போனது. அதையடுத்து, 2022 ஜூலை மாதம் நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் இலங்கையின் இடைக்கால புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.

இலங்கைக்கு அதிபர் தேர்தல்..!

தற்போது அவரின் பதவிக்காலம் நிறைவடையவிருப்பதால், (21-09-2024) அன்று இலங்கைக்கு அதிபர் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றிலேயே மிக அதிகமான வேட்பாளர்கள் (38 வேட்பாளர்கள் களத்தில்) போட்டியிடும் தேர்தலாக விளங்கும் இந்த 2024 அதிபர் தேர்தல் பார்க்கப்படுகிறது. இலங்கையின் புதிய அதிபர் யார் என்ற எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டிருக்கிறது.

ரணில் விக்ரமசிங்கே

இந்தத் தேர்தலில், தற்போதைய இடைக்கால அதிபராக இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சஜித் பிரேமதாசா, இடதுசாரி சிங்கள இனவாத கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன(ஜே.வி.பி) சார்பில் அனுரகுமார திசநாயக்க, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் மகிந்த ராஜபக்சேவின் மகனான நிமல் ராஜபக்சே, விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின்போது இலங்கையின் ராணுவத் தளபதியாக செயல்பட்ட சரத் பொன்சேகா, மக்கள் போராட்டக் கூட்டணி சார்பில் வழக்கறிஞர் நுவான் போபகே உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் போட்டியிடுகின்றனர். இருப்பினும் ரணில் விக்ரமசிங்கே, சஜித் பிரேமதாசா, அனுரகுமார திசநாயக்க ஆகிய மூவருக்குள்தான் மும்முனை போட்டி நிலவுகிறது என்கிறார்கள்.

தொடங்கிய வாக்குப்பதிவு..!

காலை 7 மணிக்கு அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், இன்றிரவே பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, நாளை மதியத்துக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, இலங்கையின் புதிய அதிபர் யார் என்பது அதிகாரபூர்வமாகத் தெரியவரும் என்கிறார்கள் இலங்கை அரசியல் வட்டாரத்தில்!

இலங்கையில் விகடன் குழு..!

அசாதாரணமான அரசியல் சூழல்… மக்கள் விலைவாசி உயர்வால் வதைபட்டுக் கொண்டிருந்த வேளையில், சென்னையிலிருந்து விகடன் குழு இலங்கைக்குப் பயணப்பட்டு, அந்த நாட்டு மக்களின் நிலைமையை சோஷியல் மீடியாவில் எண்ணற்ற வீடியோக்களாகவும், ஜூனியர் விகடன், ஆனந்த விகடன் உள்ளிட்டவற்றில் அச்சு கட்டுரைகளாகவும் வழங்கி, தமிழக மக்கள் இலங்கையின் நிலை குறித்து அறிந்துகொள்ளச் செய்தோம்.

இலங்கையில் விகடன் குழு..!

தற்போது மீண்டும் இலங்கையில் விகடன் குழு முகாமிட்டு, அதிபர் தேர்தல் குறித்தான கள நிலவரங்களைத் துரிதமாக வழங்கி வருகிறது. உலக நாடுகளின் கண்கள் பதிந்திருக்கும் இலங்கையில் விகடன் நிருபர்கள் குழுவும் தேர்தல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் உங்களுக்கு வழங்கிடத் தயாராக இருக்கிறது!

நேற்றைய தினம், `Sri Lanka Election: ஒற்றுமை இல்லாமல் இருக்கும் தமிழர்கள் – காட்டிக் கொடுத்த தேர்தல் | Ground Report

என்ற தலைப்பில், இலங்கையின் தேர்தல் கள நிலவரம் குறித்து விவரித்திருந்தோம்.

வாக்குப்பதிவு தினமான இன்று… வாக்குப்பதிவு நிலவரம், அரசியல் தலைவர்கள் கருத்துகள், லைவ் வீடியோக்கள், புகைப்படத் தொகுப்புகள் என `360 டிகிரியில்’ இலங்கை தேர்தல் குறித்த தகவல்களை உங்களிடம் கொண்டு சேர்க்கவிருக்கிறோம்! இலங்கை தேர்தல் தொடர்பான உங்கள் சந்தேகங்கள் மற்றும் கருத்துகளை எங்களிடம் கமென்ட்டில் தெரிவியுங்கள்… இலங்கையில் முகாமிட்டிருக்கும் எங்கள் நிருபர் குழுவுடன் இணைந்து, உங்களுக்குப் பதிலளிக்கிறோம்!