அனுமதி கிடைப்பததில் குளறுபடி, காவல்துறை கெடுபிடி, மாநாட்டுத் தேதியில் சிக்கல் என பல சிக்கல்களுக்கு மத்தியில் செப்டம்பர் 23 -ல் மாநாடு நடக்கும் என அறிவித்திருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தள்ளிப் போகிறது என அறிவித்தார் அதன் தலைவர் விஜய்.
மாநாடு அக்டோபர் 27 ஆம் தேதி நடக்குமென கடந்த 20 ஆம் தேதி அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார். கட்சித் தலைவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டதால் த.வெ.க நிர்வாகிகளும் பரபரப்பாக வேலையில் இறங்கியிருக்கின்றனர். பனையூர் அலுவலகத்திலிருந்தும் நிர்வாகிகளுக்கு சில உத்தரவுகள் பறந்திருக்கிறது.
விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் முதலில் செப்டம்பர் 23 ஆம் தேதிதான் மாநாட்டை நடத்த வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தார்கள். காவல்துறையிடமிருந்து ஏகப்பட்ட நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டதாலும் மாநாட்டை நடத்த குறுகிய காலமே இருந்ததாலும் மாநாட்டு தேதியைத் தள்ளிவைக்க த.வெ.க முகாம் முடிவெடுத்ததாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 15 -ம் தேதி த.வெ.க வின் மாநாடு இருக்கலாம் என்ற செய்தி பரவியது. இந்நிலையில்தான் நேற்று அக்டோபர் 27 ஆம் தேதிதான் மாநாடு என விஜய்யே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மாநாட்டு தேதி வெளியாகிவிட்ட நிலையில் த.வெ.க முகாம் பரபரப்பாகியிருக்கிறது.
மாநாடு குறித்து சில நிர்வாகிகளுடன் பேசினோம், “ செப்டம்பர் 23 ஆம் தேதி மாநாடு இருக்குமென்ற நம்பிக்கையில் வேன், பேருந்து போன்றவற்றுக்கெல்லாம் அட்வான்ஸ் கொடுத்து வைத்திருந்தோம். தென்மாவட்டம் ஒன்றிலிருந்து 60 பேர் விக்கிரவாண்டி வந்து செல்ல ஒரு பேருந்துக்கு 60000 ரூபாய் கேட்டார்கள். நிர்வாகிகளெல்லாம் இணைந்துதான் அதற்கெல்லாம் ஏற்பாடு செய்தோம். இப்போது தேதி மாறியிருக்கிறது. புக் செய்த டிராவல்ஸ் ஓனர்களிடம் பேசி தேதியை மாற்றும் வேலையில் இருக்கிறோம். அரசியல் இப்படித்தானே இருக்கும். யாரும் நம்மை ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கமாட்டார்கள். இது நெருப்பாறு அதில் தடைகளைத் தாண்டி தளபதி வெற்றிபெற எங்களால் இயன்றதை செய்வோம். அக்டோபர் 27 ஆம் தேதிதான் மாநாடு என்பது தலைவர் அறிவித்த பிறகுதான் எங்களுக்குத் தெரியும். அதற்கு முன் எந்தத் தகவலும் கசிந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தனர். தலைவருக்கு நெருக்கமான ஒரு சிலருக்கு மட்டுமே எல்லா விஷயங்களும் பகிரப்பட்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வந்தவுடன் தான் நிர்வாகிகளான நாங்கள் என்ன செய்ய வேண்டும் என மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தது.
ஏற்கெனவே தொகுதிக்கு ஒரு பொறுப்பாளர் என தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போது மாநாட்டுக்காக புதிதாக 7 பேர் கொண்ட பொறுப்பாளர் குழுவை நியமிக்கச் சொல்லியிருக்கிறார்கள். இந்த 7 பேரில் கட்டாயம் 2 பெண்கள் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார்கள்.
பல தொகுதிகளில் இந்தக் குழுவை அமைத்து தலைமைக்கும் ரிப்போர்ட் செய்துவிட்டோம். அடுத்தக்கட்டமாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்த சொல்லியிருக்கிறார்கள். தலைவரிடமிருந்து அறிவிப்பு வந்த பிறகு நாளைதான் முதல் ஞாயிற்றுக் கிழமை வருகிறது. நாளையே பெரும்பாலான மாவட்டங்களில் மாநாட்டை சிறப்பாக நடத்த ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறவிருக்கிறது. மாநாட்டுக்குத் தொண்டர்கள் எவ்வளவு பேரை எப்படி அழைத்து வர வேண்டும் மற்றும் காவல்துறையின் நிபந்தனைகள் இருந்தால் அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதைப் பற்றி ஆலோசிக்கவிருக்கிறோம். செப்டம்பர் 23 திங்கட்கிழமையாக இருந்தது. அக்டோபர் 27 ஞாயிற்றுக் கிழமையாக இருக்கிறது. மாநாட்டுக்கு தொண்டர்களை அழைத்து வர இந்தத் தேதி மாற்றமும் கூடுதல் சௌகரியத்தை கொடுத்திருக்கிறது.” என்கின்றனர்.
மாநாட்டு வேலைகள் பரபரக்க தொடங்கியிருக்கும் இந்தச் சூழலில் முக்கியமான சில மாவட்டத் தலைவர்களை வருகிற செவ்வாய்க் கிழமை அல்லது புதன் கிழமையில் ஒருநாள் சென்னைக்கு வர வேண்டியிருக்கும் எனவும் சொல்லியிருக்கிறார்கள். அந்த நிர்வாகிகளுடன் முக்கிய மீட்டிங் ஒன்றும் நடைபெறவிருக்கிறதாம். மாநாட்டின் முக்கிய வேலைகளை எப்படி செய்யலாம் என்பதைப் பற்றிய ஆலோசனைக் கூட்டமாகவும் இது இருக்கலாம் என சொல்கிறார்கள்.