Tamil News Live Today: இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! | SriLanka Presidential Election

இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! | Sri Lankan Presidential Election

அரசியல் குழப்பங்கள், அதீத கடன்சுமை, தீராத பொருளாதார நெருக்கடி என அசாதரண சூழ்நிலையில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கும் இலங்கை, தன்னை மீட்டெடுப்பதற்கான அதிபர் தேர்தலை இன்று எதிர்கொண்டு வருகிறது. இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றிலேயே மிக அதிகமான வேட்பாளர்கள் (38 வேட்பாளர்கள் களத்தில்) போட்டியிடும் தேர்தலாக விளங்கும் 2024 அதிபர் தேர்தலில், இலங்கையின் வைர முள் கிரீடத்தை சுமக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டிருக்கிறது.

இந்தத் தேர்தலில், தற்போதைய இடைக்கால அதிபராக இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சஜித் பிரேமதாசா, இடதுசாரி சிங்கள இனவாத கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன(ஜே.வி.பி) சார்பில் அனுரகுமார திசநாயக்க, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் மகிந்த ராஜபக்சேவின் மகனான நிமல் ராஜபக்சே, விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின்போது இலங்கையின் ராணுவத் தளபதியாக செயல்பட்ட சரத் பொன்சேகா, மக்கள் போராட்டக் கூட்டணி சார்பில் வழக்கறிஞர் நுவான் போபகே உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் போட்டியிடுகின்றனர். இத்தனை தலைவர்கள் போட்டியிட்டாலும் ரணில் விக்ரமசிங்கே, சஜித் பிரேமதாசா, அனுரகுமார திசநாயக்க ஆகிய மூவருக்குள்தான் மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் காலை 7 மணிக்கு அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், இன்றிரவே பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, நாளை மதியத்துக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, இலங்கையின் புதிய அதிபர் யார் என்பது அதிகாரபூர்வமாகத் தெரியவரும் என்கிறார்கள் இலங்கை அரசியல் வட்டாரத்தில்!