அக்டோபர் 2-ம் தேதி உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க உள்பட யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என செப்டம்பர் 10-ம் தேதி திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்த நிலையில் அது அ.தி.மு.க-வுக்கான நேரடி அழைப்பில்லை என அமைச்சர் உதயநிதி பங்கேற்ற நிகழ்வில் விளக்கமளித்திருக்கிறார் வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ்.
மதுஒழிப்பு மாநாடு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு உள்ளிட்ட கோரிக்கைகள் தி.மு.க கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கும் சூழலில் செப்டம்பர் 20-ம் தேதி சென்னையில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் ஒன்றில் அமைச்சர் உதயநிதியும் வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் அளூர் ஷாநவாஸும் பங்கேற்று உரையாற்றினர்.
தி.மு.க கூட்டணியை உடைக்க பெரும்பாடு படுகிறார்கள் எனப் பேசிய ஷாநவாஸ் “மதுஒழிப்பு மாநாட்டை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, செய்தியாளர்களின் கேள்வியின் அடிப்படையில் அ.தி.மு.க-வும் பங்கேற்கலாம் என இயல்பாக பதிலளித்தார். அதிலும் `வேண்டுமானால் பங்கேற்கலாம் எனச் சொன்னது அழைப்பா? இப்படி அழைத்ததற்கு அ.தி.மு.க-வை வி.சி.க சிறுமைப்படுத்துகிறது என்ற விவாதம் கிளம்பியிருக்க வேண்டும். ஆனால் கூட்டணிக்கு எதிராக எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தாத நிலையில் கூட்டணியே முறியப்போகிறதென கருத்துருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது” என்றார்.
தொடர்ந்து பேசியவர் “விவாத நிகழ்வுகளில் தி.மு.க மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்தால் 200 ரூபாய் உ.பி என்றும் தி.மு.க சொம்பு எனவும் விமர்சிக்கிறார்கள். கருத்தியல் ரீதியாக உள்ளதை பேச எந்தத் தயக்கமும் இல்லை.
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது 75 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட கட்சியின் அடுத்த முகமான உதயநிதி ஸ்டாலின் `திருமாவளவன் எனது அரசியல் ஆசான்’ என்றார். ஆகவே தி.மு.க-வுக்கும் சரி, எங்களுக்கு சரி ஆதரித்துப் பேசுவதில் தயக்கமும் இல்லை” என்றார்.
முதலமைச்சர் உருவாக்கிய இந்தக் கூட்டணி வெற்றிக் கூட்டணி எனப் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க-வின் வாக்கு சதவிகிதம் குறைந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் 2019 நாடாளுமன்றத் தேர்தலை காட்டிலும் 2024-ல் 2 தொகுதிகளில் குறைவாகத்தான் போட்டியிட்டோம். மேலும் வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள தொகுதிகளில் கூட்டணிக்கு கொடுத்துவிட்டு சவாலான தொகுதிகள் அனைத்திலும் தி.மு.க போட்டியிட்டது. அதுவே வாக்கு சதவிகித குறைவுக்கு காரணம்” என்றார்.