IND Vs BAN: ஹெல்மெட்டில் இருக்கும் வாரைக் கடிக்கும் சாஹிப் அல் ஹசன் – வினோத செயலின் பின்னணி என்ன?

இந்தியா – வங்க தேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடைபெற்று வருகின்றன. வங்கதேசத்தின் அனுபவமிக்க பேட்ஸ்மேன் சாஹிப் அல் ஹசன் அதிகபட்சமாக 32 ரன்கள் அடித்து, அணி 146 ரன்கள் பெற உதவினார்.

பேட்டிங் செய்யும்போது செய்த விநோத நடவடிக்கைக்காகக் கவனம் பெற்றுள்ளார், சாஹிப். 36/4 என வங்க தேச அணி பேட்டிங் தட்டுத் தடுமாறியபோது ப்ரஷரில் களமிறங்கினார் சாஹிப். ஆரோஷமான ஆட்டத்துக்குப் பெயர்பெற்ற சாஹிப் இந்தியாவுக்குப் பதிலடி கொடுக்கும் நோக்கில் பிட்ச்சில் நின்றபோது அவரது ஹெல்மெட்டில் கழுத்தைச் சுற்றி வரும் வாரை கடித்துக்கொண்டிருந்ததை ரசிகர்கள் கவனித்திருக்கின்றனர்.

இந்த செயல் பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டியது. கேமராவும் அவரது செயலை சூமில் காட்டியதால், சமூக வலைதளங்களில் சாஹிபின் இந்த செயலுக்குக் காரணம் என்னவாக இருக்கும் என விவாதங்கள் தொடங்கின. இது அழுத்தமான தருணங்களைக் கையாளுவதற்கான கான்சென்ட்ரேஷன் டெக்னிக்கா அல்லது சாதாரண பழக்கமா எனத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டினர்.

நேரலை கமன்ட்ரியில் இருந்த முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் மற்றும் வங்க தேசத்தைச் சேர்ந்த தமிம் இக்பால் இது குறித்துப் பேசியுள்ளார்.

இந்த வார் சாஹிப் பேட்டிங் செய்யும்போது அவரது பொசிஷன் பற்றி சுய பரிசோதனை செய்ய உதவுவதாகத் தெரிவித்தனர். பந்தை அடிக்கும்போது அவரது தலை லெக்-சைடில் அதிகம் திரும்பாமல் இருக்க வாரைக் கடிக்கிறாராம். ஒருவேளை தன்னையறியாமல் தலை சாய்ந்தால் இந்த வார் இழுத்து அவர் மீண்டும் சரியான நிலைக்கு வர நினைவூட்டும். இதனால் நல்ல கட்டுப்பாடும் சமநிலையும் கிடைக்கும் என்கின்றனர்.

இப்படி வாரைக் கடிப்பது அசாதாரணமான செயல் தான் என்றாலும் பல கிரிக்கெட் வீரர்கள் இதுபோல தங்களுக்கென சில நடைமுறைகளை வகுத்திருக்கின்றனர்.