திருப்பதிக்கு அனுப்பிய நெய் தரமற்றதா? விளக்கம் அளித்த திண்டுக்கல் நிறுவனம்..!

திருப்பதி லட்டு தயாரிப்பில் தரமற்ற நெய் கலந்த விவகாரத்தைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.ஆர் டெய்ரி நிறுவன தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

ஏ.ஆர் டெய்ரி நிறுவனம்

அப்போது ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் லெனி மற்றும் கண்ணன், திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பப்பட்ட நெய் தரமானது தான் என்று தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில்,

“ஜூன், ஜூலை என இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் அனுப்பியுள்ளோம். தற்போது அங்கு நெய் அனுப்புவது கிடையாது.

இந்த நிறுவனத்தின் மீது, நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி ஒரு செய்தி வருகிறது. அதில், எங்களது நிறுவனத்தின் பெயர் இல்லை. அதில் உள்ள செய்திகளை வைத்து தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

எங்களுடைய தயாரிப்பில் குறை இருக்கும் என்றால் வெளிப்படுத்தலாம். எங்களது நிறுவனத்தின் நெய் எல்லா இடத்திலும் உள்ளது. அதனை செக் பண்ணலாம். எங்கள் நெய்யின் தரத்தில் எந்த குறைபாடுகளும் இல்லை. 25 வருடத்திற்கு மேல் இந்த துறையில் இருந்து வருகிறோம். இந்த மாதிரி எங்களது பொருள்களின் தரத்தை இப்படி வெளிப்படுத்தியது கிடையாது.

திண்டுக்கல் நிறுவனம்

எங்களது நிறுவனத்தின் தயாரிப்பில் 0.5 சதவீதம் மட்டுமே திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பியுள்ளோம். எங்களது ஆய்வுக்கூடத்தின் அறிக்கை எங்களிடம் உள்ளது. மேலும், திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பும் பொழுதும் தர கட்டுப்பாட்டு துறை மூலம் ஆய்வு செய்துள்ளோம். அதில் எங்களது ஆய்வு அறிக்கையையும் அனுப்பியுள்ளோம்.

லட்டு தயாரிப்புக்காகவே ஒப்பந்தம் போடப்பட்டு,நெய் அனுப்பப்பட்டது. திருப்பதி தேவஸ்தானத்திற்கு பலர் நெய் அனுப்பி உள்ளனர். அதில் நாங்களும் ஒருவர். நாங்கள் அனுப்பியது 0.1 சதவீதம் கூட கிடையாது. திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பும் முன்பும், நெய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கூறிய பின்பும், தற்போது மீண்டும் பரிசோதனை செய்துள்ளோம்.

திருப்பதி லட்டு விவகாரம்

தர ரீதியாக எங்களிடம் சரியான ஆதாரம் உள்ளது. அவர்களிடமிருந்து எங்களுக்கு எந்த ஒரு பதிலும் வரவில்லை. ஆனால், எங்கள் தரப்பில் இருந்து அனைத்து ஆய்வறிக்கைகளும் அனுப்பப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தில் ஆய்வு செய்ததில், எந்த ஒரு குறைகளும் இல்லை என்றே கூறுகின்றனர். தேவஸ்தானத்தின் ஆய்வறிக்கைகளும் உள்ளன. உணவு பாதுகாப்புத்துறை மற்றும் ஐஎஸ்ஐ அக்மார்க் ஆகியோர் எங்களிடமிருந்து சாம்பிள் எடுத்துச் சென்றுள்ளனர். அதில், இதுவரை எந்த ஒரு குறைகளும் இல்லை.” என்று விளக்கம் அளித்தனர்.