தமிழக அரசியலில் கடந்த சில நாள்களாகப் பரபரப்பாக இருப்பது, முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் உதயநிதியை துணை முதலமைச்சராக்கப் போவதாக எழும் பேச்சுகள்தான். சமீபத்தில் நடந்து முடிந்த தி.மு.க பவள விழாவில், ஸ்டாலின் பெயரிலான விருதுபெற்ற நபர், `உதயநிதியை துணை முதலமைச்சராக்குங்கள்’ என்று மேடையிலேயே கோரிக்கை வைத்தார். இவர் மட்டுமல்லாது, மூத்த அமைச்சர் பொன்முடியும், `வருங்கால தமிழகம் உதயநிதி’ என்று மேடையில் பேசினார்.
தி.மு.க அமைச்சர்களும், `இன்னும் ஒரு வாரத்தில் உதயநிதி துணை முதலமைச்சராகிவிடுவார்’ என்று வெளிப்படையாகக் கூறிவருகின்றனர். இருப்பினும், இதுபற்றி முதல்வர்தான் முடிவெடுப்பார் என உதயநிதி கூறிவருகிறார்.
இவ்வாறிருக்க, வேட்டையன் பட இசைவெளியீட்டுக்காக சென்னை விமான நிலையம் வந்திறங்கிய ரஜினி, உதயநிதி பற்றிய பத்திரிகையாளர் கேள்விக்கு, `அரசியல் கேள்வி கேக்காதீங்க’ என்று கூறிவிட்டு நகர்ந்தார். இந்த நிலையில், யூடியூபில் தன்னையும் ரஜினியையும் தொடர்புபடுத்தி வந்திருந்த வீடியோ தலைப்பைப் பார்த்து, தான் அதிர்ச்சியடைந்ததாக உதயநிதி தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் நடைபெற்ற `தேர்தல் 2024: மீளும் ‘மக்கள்’ ஆட்சி’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய உதயநிதி, “காலைல ஒரு நிகழ்ச்சியை முடிச்சிட்டு வெளியே வந்து என் செல்போன்ல யூடியூபைப் பார்த்தப்போ, `உதயநிதி துணை முதலமைச்சராகிறாரா, சூப்பர் ஸ்டார் ரஜினி ஆவேசம்’ என்ற தலைப்பைப் பார்த்து நானே பயந்துட்டேன்.
இன்னும் அறிவிப்பே வரவில்லை. அதற்கான முழு உரிமையும் முதலமைச்சரிடம்தான் இருக்கு. இதை முதலமைச்சரிடம்தான் கேக்கணும். என்கிட்ட கேட்டீங்க சரி, அவரே பாவம். இதுக்கும் இப்போ, `சூப்பர் ஸ்டாருக்கு உதயநிதி பதிலடி-னு’ தலைப்பு வைக்க போறாங்க” என்று கலகலப்பாகப் பேசினார்.