பழிக்குப் பழி; கொலை வெறியுடன் வலம்வந்த ரெளடிகள் – சுட்டுப்பிடித்த கோவை போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஆல்வின் குமார். ரெளடியான இவர்மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. கடந்த 2023-ம் ஆண்டு ஆவராம்பாளையம் – நவ இந்தியா சாலையில் சத்யபாண்டி என்ற ரெளடி சுட்டுக் கொல்லப்பட்டார்.

சத்யபாண்டி

இந்த வழக்கில் ரெளடி சஞ்சய் ராஜா, ஆல்வின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருந்தனர். சில மாதங்களில் சிறையில் இருந்த ஆல்வின் நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்.

கோவை ரெளடி ஆல்வின்

ஆனால், ஆல்வின் வழக்கு விசாரணைக்காக கோவை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிமன்றம் ஆல்வினை கைது செய்ய பிடி வாரான்ட் பிறப்பித்தது. அதனடிப்படையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு, கடந்த சில மாதங்களாக போலீஸார் ஆல்வினை தேடி வந்தனர்.

சம்பவம் நடந்த கொடிசியா மைதானம்

இந்நிலையில் ஆல்வின் கோவை கொடிசியா மைதானத்தில் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.  உடனடியாக போலீஸார் அங்கு விரைந்துள்ளனர்.

போலீஸார் ஆல்வினை கைதுசெய்ய முயற்சித்தபோது, அவர் ராஜ்குமார் என்ற தலைமை காவலரை கத்தியால் குத்திவிட்டு தப்பி செல்ல முயன்றதாக காவல்துறையினர் கூறுகின்றனர். இதனால் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், துப்பாக்கியை எடுத்து ஆல்வினின் இரண்டு கால் முட்டி பகுதியிலும் சுட்டுள்ளார்.

ரெளடி ஆல்வின்

காயமடைந்த ஆல்வின் மற்றும் தலைமை காவலர் ராஜ்குமார் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போலீஸ் விசாரணையில் மேலும் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட சத்யபாண்டியின் நண்பரான பசும்பொன் குமார், தனது நண்பனின் கொலைக்குப் பழிவாங்க திட்டமிட்டதாகவும், இதையறிந்த ஆல்வின், பசும்பொன் குமாரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டு பணியாற்றி வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பசும்பொன் குமார்

இவர்களுக்கு தென் மாவட்டங்களைச் சேர்ந்த பிரபல ரெளடிகள் துணையாக இருப்பதும் தெரியவந்துள்ளது.