ரஷ்யா: போரில் ஈடுபடுத்தப்படும் அப்பாவி இந்தியர்கள்… என்ன நடக்கிறது?

ரஷ்யா- உக்ரைன் போர்க்களம் மூன்று ஆண்டுகள் கடந்தும் அனல் தகித்து கொண்டிருக்கும் நிலையில், இந்தியர்கள் சிலர், வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றப்பட்டு ரஷ்யா சார்பாக விருப்பமின்றி போரில் ஈடுபடுத்தப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இவர்கள் அனைவரும் 19 முதல் 35 வயதுக்குட்பட்ட ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அன்றாட கூலித் தொழிலாளிகள், மீனவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள்.

ரஷ்யா

அடிப்படை ராணுவ பயிற்சி கூட இல்லாத இவர்களை, இரண்டு லட்சம் வரையில் சம்பளம், ரஷ்ய குடியுரிமை போன்ற ஏமாற்று வார்த்தைகளை நம்பவைத்து, ரஷ்ய மொழியில் உள்ள படிவங்களில் கையெழுத்து பெற்று, உயிருக்கு உத்திரவாதம் இல்லாத போர் நடக்கும் மைய பகுதிகளுக்கு கட்டாயப்படுத்தி அனுப்பியுள்ளனர்.

சமூக வளைதளங்களில் வெளியான வேலைவாய்ப்பு செய்திகளை நம்பி ஏஜெண்டுகள் மூலம் இவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வந்த நிலையில், ஏமாற்றப்பட்ட இரண்டு இந்தியர்கள் ரஷ்ய போரில் உயிரிழந்ததையடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

அங்கிருந்து தப்பித்து வந்தவர்களில் ஒருவரான கேரளாவைச் சேர்ந்த மூத்தப்பன் என்ற 23 வயது மீனவர் , “நான் முகநூல் பக்கத்தில் பார்த்த விளம்பரத்தை நம்பி ரஷ்யா சென்றேன் , அங்கே நான் போரின் கோர முகத்தைப் பார்த்தேன், உடன் இருந்தவர்கள் எங்கள் கண் முன்னே உயிரிழப்பதை கண்டு துடிதுடித்துப் போனோம்” என பேட்டி அளித்திருக்கிறார்.

இது குறித்து சி.பி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், இவர்கள் ஒரு நெட்வொர்க்கின் கீழ் இயங்குவதாகவும் சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப் போன்ற தளங்களை பயன்படுத்தி இவ்வாறான ஏமாற்று வேளைகள் அரங்கேறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா – உக்ரைன் போர்

மேலும், தில்லி மற்றும் மும்பையில் உள்ள பல்வேறு விசா நிறுவனங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டு 50 லட்சம் ரூபாய் வரையில் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனின் தெற்கு பகுதியில் ரஷ்ய ராணுவ கட்டுபாட்டில் இருந்த முன்னாள் இந்திய ராணுவ வீரர் உர்ஜன் தாமாங்க் நீண்ட நாள்களுக்கு பிறகு இப்போது நாடு திரும்பியிருக்கிறார்.

இதுவரை போரில் கட்டாயமாக ஈடுபடுத்த பட்ட இந்தியர்களில் 9 பேர் கொல்லபட்டுள்ளதாகவும் , இது போன்ற ஏமாற்று வேளைகளில் ஈடுப்பட்ட 19 பேர் கைது செய்யபட்டுள்ளதாகவும் இந்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு 91 இந்தியர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், இன்னும் சிலரது நிலைமை உறுதிபடுத்தப்படாமலே இருக்கிறது.