இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், 1902 முதல் 1928 வரை பிரிட்டிஷ் இந்தியாவின் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராகப் பணியாற்றிய சர் ஜான் மார்ஷல் (Sir John Marshall), 1920-ல் ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோவில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) அகழாய்வுகளை மேற்கொண்டார். இந்த அகழாய்வு முடிவுகளை 1924 செப்டம்பர் 20-ம் தேதி வெளியிட்டார்.
மேலும், அந்த அகழாய்வில் கண்டறியப்பட்ட நாகரிகம் திராவிட நாகரிகமாக இருப்பதற்கான சாத்தியக்கூறு அதிகமாக இருப்பதாக அறிவித்திருந்தார். தற்போது, இதனை சர் ஜான் மார்ஷல் வெளியிட்டு இன்றோடு 100 ஆண்டுகள் ஆகும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து, எக்ஸ் வலைதளப் பக்கத்தில் ஸ்டாலின், “சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு, சர் ஜான் மார்ஷல் 1924 செப்டம்பர் 20 அன்று சிந்து சமவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பை அறிவித்து இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றை மாற்றி வடிவமைத்தார். அதற்கு இந்நாளில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
சிந்து சமவெளி நாகரிகத்தின் பொருள் கலாசாரத்தை சரியாக அறிந்து கொண்டு, அதை திராவிட இனத்துடன் அவர் இணைத்தார். இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கண்டுபிடிப்பின் நூற்றாண்டு விழாவைப் பன்னாட்டு கருத்தரங்கு நடத்தி, சர் ஜான் மார்ஷலின் உருவ சிலையை தமிழகத்தில் நிறுவப்படும் என்று எனது அரசு ஏற்கெனவே அறிவித்திருக்கிறது” என்று ட்வீட் செய்திருக்கிறார்.