காவல்கிணறு: வருடக்கணக்கில் செயல்படாத வணிக வளாகம்; `மனு கொடுத்தும் பலனில்லை’ – குமுறும் விவசாயிகள்!

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் அமைந்துள்ளது காவல்கிணறு மலர் வணிக வளாகம். 2009-ம் ஆண்டு சுமார் 1.63 கோடி செலவில் 40 கடைகள், குளிர்சாதன அறைகள் என மிகுந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பாட்டில் இல்லாமல் மூடப்பட்டு இருக்கிறது. இதற்கான காரணம் குறித்து ராதாபுரம் வட்டார விவசாய நலச் சங்க செயலாளர் ராஜபவுலைச் சந்தித்துப் பேசினோம். அவர், “காவல்கிணறு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கக்கூடிய விவசாயிகள் அவர்களுடைய பொருள்களை நேரடியாக சந்தைப்படுத்த கொண்டுவரப்பட்டதுதான் இந்த மலர் வணிக வளாகம்.

மலர் வணிக வளாகம்

இதன் மூலம் இடைத்தரகர் இல்லாமல், எங்கள் பொருள்களை நேரடியாக விற்பனை செய்ய முடியும். காவல்கிணறு விளக்கு போன்ற முக்கிய சந்திப்பில் விற்பனை செய்வது எங்களுக்கு அதிக சந்தை வாய்ப்பு கிடைப்பதற்கான முக்கிய அம்சம். இதன் மூலம் எங்கள் பொருள்களை எடுத்துச் செல்லும் செலவும் குறையும். இந்த வளாகம் 2011-ம் ஆண்டிலிருந்தே செயல்படவில்லை. இதனால் விவசாயிகள் குறைந்த லாபத்திற்கு, வியாபாரிகளிடம் பொருள்களைக் கொடுத்து, சந்தைபடுத்தும் நிலை உள்ளது.

கடைகள் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு, வியாபாரிகள் தலையீடு என எழுந்த குற்றச்சாட்டுகளால் உருவான பிரச்னைகள் காரணமாக, இந்த வளாகம் செயல்பாட்டில் இல்லாமல் மூடப்பட்டது. இந்தப் பகுதியில் இயங்கி வரும் விவசாய சங்ககளிலிருந்தும், சமூக அமைப்புகள் சார்பாகவும், பல்வேறு முறை மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், துறை அதிகாரிகளுக்கும் வளாகத்தை திறக்க கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

மலர் வணிக வளாகம்

அதன் பிறகு நடந்த தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளிலும் தேர்தல் அறிக்கைகளிலும், இந்த வளாகம் மீண்டும் திறக்கப்படும் என்று உறுதி கொடுத்தனர். ஆனால் இன்று வரை இந்த வளாகத்தை திறக்க எந்த முன்னெடுப்பும் எடுக்கப்படவில்லை. இந்த வளாகம் திறக்கப்படும் பட்சத்தில் மலர் விவசாயிகளுக்கு ஒதுக்கீடு செய்த பிறகு, இயற்கை விவசாயிகளுக்கும் ஓரிரு கடைகளில் அனுமதி வழங்கினால் இயற்கை விவசாயப் பொருள்களை சந்தைப்படுத்தவும் எங்களுக்கு வாய்ப்பாக இருக்கும்” என்றார்.