`ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற திருமாவளவனின் முழக்கங்கள் அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2 ஆம் தேதி மகளிர் சார்பில் மது ஒழிப்பு மாநாட்டை நடத்துவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அறிவித்திருக்கின்றனர். இந்த மாநாட்டிற்கு பாமக, பாஜக கட்சிகளைத் தவிர, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார் திருமாவளவன். இதையடுத்து திருமாவளவன் திமுக உடன் முரண்படுகிறார், திமுக கூட்டணி உடைகிறது என்ற பேச்சுகள் அடிபடத் தொடங்கின. இந்த சலசலப்புகள் ஓய்வதற்குள், ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ எனத் திருமாளவன் பேசிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியிருந்தது. இதுதொடர்பாக திருமாவளவன் எக்ஸ் வலைதளபக்கத்தில் பதிவு ஒன்று பதிவிடப்பட்டு உடனே நீக்கப்பட்டது. பின் மீண்டும் பதிவிட்டு விளக்கமும் அளித்திருந்தார்.
இது பெரும் பேசுபொருளாக, ‘2026 -ல் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு. கடைசி மனிதனுக்கும் சனநாயகம். எளிய மனிதனுக்கும் அதிகாரம்’ என கோவை மாநகரில் ஒட்டப்பட்ட போஸ்டர், சமூக வலைதளங்களில் வைரலானது. பற்றி எரிந்த இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் முயற்சியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசியிருந்தார் திருமாவளவன்.
இந்நிலையில் விசிக – திமுக கூட்டணி விரிசல் சர்சைகளுக்கு விளக்கமளித்திருக்கும் திருமாவளவன், “திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிதான் இது இந்த விமர்சனங்கள், சர்ச்சைகள். திமுக கூட்டணியில் இருக்கும் ஒவ்வொரு கட்சிகளும் அரசியலில் பல பத்தாண்டுகள் அனுபவம் கொண்டிருக்கும் கட்சிகள். திமுக கூட்டணிக்கு உள்ளே இருப்பவர்கள் பேச வேண்டிய விஷயத்தை, வெளியிலிருப்பவர்கள் பேசுகிறார்கள். இது அவர்களின் சூழ்ச்சியான அரசியலைக் காட்டுகிறது.
டெல்லியிலேயே இருப்பதைப் போல ஒரு கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் உருவாக வேண்டும். ஆனால் திமுக, அதிமுக இன்னும் தனித்து ஆட்சி செய்யக்கூடிய, ஆதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க இயலாத நிலையிலேயே மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கின்றனர். இந்த நிலையை விசிக நன்றாக உணர்ந்திருக்கிறது. 1999ம் ஆண்டு தேர்தல் அரசியலில் விசிக காலடி எடுத்து வைத்தபோது நாங்கள் முன்வைத்த முழக்கம் ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்பதாகும். எனவே எந்த நேரத்தில் எதைக் கேட்க வேண்டும், அதற்கான காலம் கனிந்திருக்கிறதா என்பதை அறிந்தவர்கள்தான் திமுக கூட்டணியில் இருக்கிறோம். கேட்க வேண்டிய நேரத்தில் கேட்க வேண்டிய வலிமை எங்களுக்கு விரைவில் வரும்” என்று கூறியிருக்கிறார்.