வேலுமணி மீது இரண்டாவது ஊழல் வழக்கு..! நடவடிக்கையா? கண்துடைப்பா?

பிளிச்சிங் பவுடர் முதல் ஸ்மார்ட் சிட்டி வரை…

கடந்த 10 ஆண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில் வேலுமணி கவனித்து வந்த ஊரக உள்ளாட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்துறையில் எழுந்ததுபோல் எந்த துறையிலுமே ஊழல் புகார்கள் எழவில்லை. தெருவிளக்கு முதல் பிளிச்சிங் பவுடர் வாங்கியது வரையும்… ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலும் ஏகப்பட்ட ஊழல் புகார் எழுந்தது.

ஸ்மார்ட் சிட்டி பணிகள்

திமுக ஆட்சிக்கு வந்ததும், ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பாக விசாரிக்க, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் ஒருநபர் குழுவை அமைத்தனர். அந்தக் குழு தன்னுடைய ஆய்வறிக்கையை அரசுக்கு வழங்கிவிட்ட நிலையில், இதுவரை அந்த அறிக்கையை வெளியிடவில்லை. இதற்கிடையே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தெருவிளக்கு மாற்றியதில் முறைகேடு நடந்திருப்பதாக, முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் எட்டு நிறுவனங்கள் மீது 2022 செப்டம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை.

20 வாட்ஸ் எல்.இ.டி பல்ப் 6,950 ரூபாய்!

இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக அறப்போர் இயக்கத்தின் புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.

” தெருவிளக்குகளுக்காக மின்சார செல்வை குறைக்கும் விதமாக நகராட்சிகளில் எல்.இ.டி பல்ப்பை பொருத்தும் திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2015-ல் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். இதற்கான அறிவிப்பு 2016-ல் வெளியிடப்பட்டு 8 லட்சம் பல்ப் மாற்றத்துக்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், திட்டம் செயல்படுத்துவதில் தாமதமானது.

விளக்கு – ஊழல்

20 வாட்ஸ் எல்.இ.டி பல்ப் அன்றைய காலகட்டத்தில் வெறும் 900 ரூபாய்தான். ஆனால், 6,950 ரூபாய் வரை டெண்டரில் குறிப்பிட்டு இருந்தார்கள்.

அவரது மறைவுக்கு பிறகு, இந்த திட்டத்துக்கு கூடுதல் நிதியாக 875 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. 2015 – 2018 வரையில் மாவட்ட அளவில் இதற்கான டெண்டர் விடப்பட்டது. அப்போது அமைச்சராக இருந்த வேலுமணி, தனது அதிகாரத்தை பயன்படுத்தி, குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு டெண்டரை வழங்கி இருக்கிறார். இதில் ஒப்பந்தமான நிறுவனங்கள் சந்தை மதிப்பைவிட கூடுதல் விலைக்கு வாங்கப்பட்டது. உதாரணமாக 20 வாட்ஸ் எல்.இ.டி பல்ப் அன்றைய காலகட்டத்தில் வெறும் 900 ரூபாய்தான். ஆனால், 6,950 ரூபாய் வரை டெண்டரில் குறிப்பிட்டு இருந்தார்கள். இந்த திட்டத்தை செயல்படுத்தியதில் சுமார் 500 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருந்தது.

இதை சுட்டிக்காட்டி முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்பட கே.சி.பி என்ஜினியர்ஸ் பிரைவெட் லிமிட், ஏசிஇ டெக் மெசினரி (ACE Tech Machinery Components india pvt ltd), சி.ஆர்.கன்ஷ்ட்ரக்‌ஷன் (CR Construction), சபரி எல்க்ட்ரிக்கல்ஸ் (Sabari Electricals), முருகன் எல்க்ட்ரிக்கல் ட்ரேடர்ஸ் (Murugan Electrical Traders), ஓரியட் போல்ஸ் (Orient Poles), ஆர்.கே.எம் எல்க்ட்ரிக்கல்ஸ் (R.K.M Electricals) ஆகிய நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை 2022 செப்டம்பரில் வழக்குப்பதிவு செய்தது. ஆனால், இந்த வழக்கு அடுத்தக்கட்டத்துக்கு நகரவே இல்லை. ” என்றனர்.

எல்.இ.டி பல்பு ஊழல் தொடர்பான எப்.ஐ.ஆர்

கண்துடைப்புபோலதான் தெரிகிறது…

தொடர்ந்து பேசியவர்கள், ” இதேபோலதான், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒரு மாநகராட்சிக்கு மத்திய அரசு 500 கோடி ரூபாயும், மாநில அரசு 500 கோடி ரூபாயும் ஒதுக்கியது. தமிழகத்தில், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், சேலம், ஈரோடு, வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 11 மாநகராட்சிகள் இந்தத் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்டன. ஒவ்வொரு மாநகராட்சிக்கும் சுமார் 1,000 கோடி ரூபாய் என, மொத்தம் 10,651 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, 2017-ம் ஆண்டு திட்டப் பணிகள் தொடங்கின. இதில், சென்னை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி என எல்லா மாநகராட்சிகளிலும் முறைகேடுகள் நடந்தன.

இதுதொடர்பான புகாரில்தான் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை வழங்குப்பதிவு செய்திருக்கிறது. இந்த ஊழல் குற்றச்சாட்டில் அப்போது சென்னை மாநகராட்சியின் உயர் பொறுப்பில் இருந்த அதிகாரிக்கும் தொடர்பு இருக்கிறது. ஆனால், அவரை காப்பாற்றும் நோக்கில், அவரை வழக்கில் சேர்க்கவில்லை.

ஸ்மார்ட் சிட்டி ஊழல் எப்.ஐ.ஆர்

அதேபோல, ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி டேவிதார் குழுவின் அறிக்கையை அரசு இன்றுவரை வெளியிடாமல் இருக்கிறது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது இது வெறும் கண்துடைப்புபோலதான் தெரிகிறது.” என்றனர் விரிவாக.

வேலுமணி – சந்திரசேகர்

தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், வேலுமணி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவரின் ரோஜா இல்லத்தில் (அமைச்சர்களுக்கான அரசு பங்களா) வைத்துதான் டெண்டர் இறுதி செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக வேலுமணிக்கு நெருக்கமான கோவை புறநகர் அ.தி.மு.க இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சந்திரசேகர்தான் யாருக்கு டெண்டர் கொடுக்கவேண்டும் என்பதை உறுதி செய்து இருக்கிறார். இவர் கே.சி.பி இன்ஜினியரிங் நிறுவனத்திலும் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.

கோவிந்தராவ் ஐ.ஏ.எஸ்

அதேபோல, சென்னை மாநகராட்சி டெண்டர் கமிட்டியில் இருந்த கோவிந்த ராவ் ஐ.ஏ.எஸ் பரிந்துரையில் டெண்டர் வழங்கப்பட்டு இருப்பதாகவும், இதற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகளான ஏ.எஸ்.முருகன், கே.சின்னசாமி, பி.ஆர்.சரவணமூர்த்தி, வி.பெரியசாமி, வி.சின்னதுரை, ஏ.நச்சன், டி.சுகுமார், கே.விஜயகுமார், எல்.நந்தகுமார், எம்.புகழேந்தி உள்ளிட்டவர்களின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரே ஐ.பி முகவரியில் பல டெண்டர் விண்ணப்பங்கள்..!

இதுதொடர்பாக அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைப் பொறுத்தவரை, சென்னை மாநகராட்சியில்தான் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது. 2018-ம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ், மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, ரெடி மிக்ஸ் கான்கிரீட் தயாரிப்புக்காக எம்-சாண்டைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதன் விலை ஒரு கியூபிக் மீட்டருக்கு 5,000 ரூபாய்தான். ஆனால், ஆற்றுமணலைப் பயன்படுத்தியதாக 10,000 ரூபாய் முதல் 12,000 ரூபாய் வரை கணக்கு காட்டியிருக்கிறார்கள்.

ராதாகிருஷ்ணன்,அறப்போர் இயக்கம்

இந்தத் திட்டத்துக்கான டெண்டரில் பங்கேற்ற பல நிறுவனங்கள், ஒரே ஐ.பி முகவரியைத்தான் பயன்படுத்தியிருக்கின்றன. குறிப்பாக, அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியின் அமைச்சர் பங்களாவான ‘ரோஜா இல்ல’த்திலிருந்தே சில டெண்டர் விண்ணப்பங்கள் போடப்பட்டு, அவர்களுக்கு டெண்டரும் கிடைத்திருக்கிறது. அறப்போரின் குற்றச்சாட்டை லஞ்ச ஒழிப்புத்துறை கவனத்தில் எடுத்துக் கொண்டு தனது முதல் தகவல் அறிக்கையில் சேர்த்து இருக்கிறது. விரைவிலேயே ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழலை அரங்கேற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என்றனர்.