One Nation One Election: அமைச்சரவை ஒப்புதல்… அடுத்து என்ன… `ஒரே நாடு; ஒரே தேர்தல்’ சாத்தியமா?!

`ஒரே நாடு; ஒரே தேர்தல்’ – மத்தியில் ஆளும் பா.ஜ.க-வின் கனவுத் திட்டம். கடந்த சில ஆண்டுகளாகவே இந்தத் திட்டத்தைக் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு. தற்போது, அந்த முயற்சி அசுர வேகம் எடுத்திருக்கிறது!

`ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்றால் என்ன?

நாடு முழுவதும் ஒரே நேரத்தில், நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவதே `ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டம். இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்காக, கடந்த ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்தது மத்திய அரசு. `ஒரே நாடு; ஒரே தேர்தல் முறை அமலுக்கு வந்தால், பொருளாதார ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பலன் கிடைக்கும்’ என வாதாடியது பா.ஜ.க. எதிர்க்கட்சிகளோ, “இந்தத் தேர்தல் முறை மத்தியில் இருக்கும் பா.ஜ.க வெல்வதற்கு வாய்ப்புகளை உண்டாக்கித் தரும். அதுமட்டுமல்லாமல், இதனால் பல குழப்பங்கள் ஏற்படும். ஜனநாயகத்துக்கும் இது ஆபத்துதான்” என்று இந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கின்றன.

தேர்தல்

இந்தச் சூழலில், ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு `ஒரே நாடு; ஒரே தேர்தல்’ தொடர்பாக 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையைக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் சமர்ப்பித்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்த ஆட்சிக் காலத்திலேயே ஒரே நாடு, ஒரே தேர்தல் அமல்படுத்தப்படும்” என அண்மையில் பேசியிருந்த நிலையில், இந்தத் திட்டத்துக்கு தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி, அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பதால், இந்தத் திட்டம் மீண்டும் தேசிய அரசியலில் விவாதமாக மாறியிருக்கிறது.

ராம்நாத் கோவிந்த் குழுவின் பரிந்துரைகள் என்ன?

ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் சில முக்கியப் பரிந்துரைகள் இங்கே…

* ஒவ்வொரு ஆண்டும் பல தேர்தல்கள் நடத்தப்படுவதால், அரசுகள், வணிகங்கள், தொழிலாளர்கள், நீதிமன்றங்கள், அரசியல் கட்சிகள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எனப் பொதுச் சமூகத்துக்கு பெரும் சுமை ஏற்பட்டிருக்கிறது. எனவே, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தத் தேவையான நடவடிக்கையை மீண்டும் மேற்கொண்டு, அதற்குத் தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மத்திய அரசு உருவாக்க வேண்டும். இதற்காக அரசியலமைப்பில் குறைந்தபட்ச திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

ராம்நாத் கோவிந்த் குழு – குடியரசுத் தலைவர்

* மக்களவை, மாநில சட்டமன்றத் தேர்தல்கள் ஒரே கட்டமாக நடத்தப்படும். அதிலிருந்து 100 நாள்களுக்குள்ளாக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்திக் கொள்ளலாம். நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்திலோ, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஆட்சி கவிழ்க்கப்பட்டாலோ, புதிய தேர்தல் நடத்தலாம். இந்தப் புதிய தேர்தல் என்பது அவையின் மீதமுள்ள பதவிக்காலத்துக்கு மட்டுமே பொருந்தும்.

* மாநிலங்களுக்குப் புதிய தேர்தல்கள் நடத்தப்படும் பட்சத்தில், மக்களவையின் பதவிக்காலம் முடியும் வரை மட்டுமே அந்தச் சட்டப்பேரவைகள் நீடிக்கும். இதற்காக, மக்களவை தேர்தல் நடத்தப்படும் வரை சட்டப்பேரவையின் பதவிக்காலத்தை நீட்டவும், குறைக்கவும் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். சட்டப்பிரிவு 83, 172 ஆகிய பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

ராம்கோவிந்த் குழுவின் பரிந்துரைகள் ஒருபக்கம் இருக்க, சட்டக் கமிஷனும் இது தொடர்பாக ஆராய்ந்து வருகிறது. விரைவில் இது குறித்த அறிக்கையைச் சட்டக் கமிஷனும் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சரவை இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியிருக்கும் நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட 15 எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றன.

மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “இந்தத் திட்டம் வெற்றிபெறப் போவதில்லை… மக்களும் இதை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. மக்களைத் திசை திருப்பவே இந்தத் திட்டத்தைக் கையிலெடுத்திருக்கிறது பா.ஜ.க” என்றிருக்கிறார். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் மனோஜ் ஜா, “மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ், இது தொடர்பான ஆலோசனையில் 80 சதவிகிதம் பேர் இதை ஏற்றுக்கொண்டதாகக் கூறியிருக்கிறார். யார் அந்த 80 சதவிகிதம் பேர்… எங்களிடமெல்லாம் இது தொடர்பாக யாரும் பேசவில்லை. இதை எங்கள் கட்சி கடுமையாக எதிர்க்கிறது” என்றிருக்கிறார்.

ஒரே நாடு; ஒரே தேர்தல் சாத்தியமா?

ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கும் நிலையில், `அடுத்து என்ன… இந்தத் திட்டம் சாத்தியமா?’ எனப் பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியிருக்கின்றன. இது தொடர்பாகப் பேசும் அரசியல் பார்வையாளர்கள், “இந்தத் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கும் நிலையில், இது தொடர்பான மசோதாக்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வரும்.

குறிப்பாக, இந்தத் திட்டத்தைக் கொண்டு வர சில சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கு, நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படுகிறது. மக்களவையைப் பொறுத்தவரை, 543 எம்.பி-க்களில் மூன்றில் இரண்டு பங்கு என்பது 364 பேர். ஆனால், பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணிக்கு 292 எம்.பிக்களின் ஆதரவுதான் இருக்கிறது. அதேபோல, மாநிலங்களவை மூன்றில் இரண்டு பங்கு என்பது 164. ஆனால், என்.டி.ஏ கூட்டணிக்கு 112 எம்.பிக்கள் தான் இருக்கிறார்கள். எனவே, 2029-ல் இந்தத் திட்டத்தை அமல்படுத்துவது பா.ஜ.க-வுக்கு கிட்டத்தட்ட சாத்தியமில்லாத விஷயம்தான்” என்கிறார்கள்.

Modi

“இந்தியாவுக்கு `ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டம் மிக மிகத் தேவை” என்கிறார் பிரதமர் மோடி. அந்தத் திட்டத்தைச் சாத்தியப்படுத்த பா.ஜ.க-விடம் கைவசம் என்ன திட்டம் இருக்கிறதோ..?!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb