விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்த உள்ள மது ஒழிப்பு மாநாடு அரசியல் ரீதியாக பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது. திருமாவளவன் திமுக உடன் முரண்படுகிறார், திமுக கூட்டணி உடைகிறது என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் சந்தித்து பேசியுள்ளனர். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற திருமாவளவனின் வீடியோவும் வைரலானது
இந்நிலையில் விசிகவினர் கோவையில் ஒட்டிய போஸ்டர் மீண்டும் விவாதத்தை எழுப்பியது. அதில், “2026 -ல் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு. கடைசி மனிதனுக்கும் சனநாயகம். எளிய மனிதனுக்கும் அதிகாரம்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கோவை மாநகரில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர், சமூகவலைதளங்களிலும் வைரலானது.
இதையடுத்து திருமாவளவன் திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கோவை வந்திருந்தார். கோவை விமான நிலையத்தில் அவரை வரவேற்பதற்காக விசிக நிர்வாகிகள், தொண்டர்கள் அங்கு வந்திருந்தனர்.
அப்போது, ‘எழுச்சித் தமிழர் வாழ்க, வருங்கால தமிழக முதல்வர் அண்ணன் திருமாவளவன் வாழ்க.” என்று கோஷம் எழுப்பினர். இதுவும் சமூகவலைதளங்களில் வைரலாக பரவுகிறது.