புதுக்கோட்டை மாவட்டம், ஆதனகோட்டையில் அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அ.தி.மு.க ஏற்கெனவே வரவேற்பு தெரிவித்துள்ளது. ஆனால், தற்போதுதான் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்துள்ளதால் அது நடைமுறைப்படுத்தும் பொழுது அ.தி.மு.க முழுமையான தகவலை தெரிவிக்கும். உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்குவது குடும்ப அரசியலின் உச்சம். கழகத்தை குடும்பமாக கருதினார் அண்ணா. ஆனால், தி.மு.க குடும்பத்தையே கழகமாக மாற்றி ஆட்சி அதிகாரத்தை அவர்களுக்குள்ளே தக்கவைத்து வருகின்றனர். மறைந்த தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின், தற்போது உதயநிதி ஸ்டாலின் என்று நைச்சியாக கலைஞர் கருணாநிதி குடும்பத்திற்கு என்று அதிகாரம் அவர்களுக்கு உள்ளாகவே இருக்கிறது. தி.மு.க-வின் சாதாரண தொண்டன் முதல் பெரிய தலைவர்கள் வரை எவ்வளவு நபர்கள் இருக்கிறார்கள். அதில், ஒருவர்கூட துணை முதல்வராக வாய்ப்பு தகுதி இல்லையா என்பதை நாங்கள் கேட்கின்றோம். தந்தை பெரியார் போட்ட விதை பேரறிஞர் அண்ணா உடைய பேச்சு இதுதான் முழுமையான காரணம். பெரியார், அண்ணாவின் கொள்கைகளை நீர்த்துப் போக செய்துவிட்டது தி.மு.க. பேரறிஞர் அண்ணாவுடைய கொள்கை கோட்பாடு லட்சியங்களை மார்பிலும், தோளிலும் தூக்கி சுமப்பது அ.தி.மு.க தான்.
திருமாவளவன் நடத்தும் மதுவிலக்கு மாநாடு குறித்து ஏற்கெனவே அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து கூறிவிட்டார். இந்த மாநாடு குறித்து திருமாவளவன் செயல்பாடு போகப் போகத்தான் தெரியும். கூட்டணிக்கு காலம் இருக்கிறது. எவ்வளவோ மாற்றங்கள் வர இருக்கிறது. மாற்றம் ஒன்றே மாறாதது. பூரண மதுவிலக்கு சாத்தியம் என்பதை தமிழ்நாட்டில் உறுதிப்படுத்த வேண்டும். 500 கடைகள் மூட வேண்டும் என்ற கருத்து எங்களது அரசில் இருந்தது. அதன்படி, மதுக்கடைகளை மூடச் செய்தோம். அதற்கு எடப்பாடி பழனிசாமி துணையாக நின்றார்.
ஆனால், தி.மு.க டாஸ்மாக் கடைகளை அதிகளவு திறந்துள்ளது. டாஸ்மாக் கடைகள் வேலை நேரத்தில் முன்பக்கமும் வேலை இல்லாத நேரத்தில் பின்பக்கமும் செயல்படும் பாணியை தி.மு.க கடைபிடிக்கிறது. மரம் வெட்டும் கோடரிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து மரம் வெட்டக் கூடாது என்று மாநாடு நடத்தியது என்று ஒரு கவிஞர் கூறியுள்ளார். அதேபோலத்தான், இந்த மாநாடு. தி.மு.க நினைத்தால் பூரண மது விலக்கை அறிவித்து விடலாம். ஆண்டுதோறும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டே வரலாம். அதை அவர்கள் செய்யவில்லை. கலைஞர் கருணாநிதி மது கடைகளை திறந்ததுதான் காரணம். பாண்டிச்சேரியில் மது கடைகள் திறந்துள்ளது. கற்பூர வளையத்திற்குள் தமிழ்நாடு சிக்கி இருக்கிறது. பற்றிக்கொள்ளக் கூடாது என்ற கருத்தை கலைஞர் கருணாநிதி வைத்தார். இந்தியாவில் குஜராத்தை தவிர்த்து தமிழ்நாட்டில் தான் சுதந்திர நாட்டில் பூரண மதுவிலக்கு இருந்தது. ஆனால், முதல் முதலாக அந்த கடைகளை திறந்தது கலைஞர் கருணாநிதி தான் என்பதை மறுக்க முடியாது. மது கடைகளை திறந்து விட்டு பழக்கப்படுத்தி, அடிமைப்படுத்தியது அவர்கள் தான்.
விஜய் அரசியலை போகப்போக பார்க்க வேண்டும். நடிகர் விஜய் புதிதாக கட்சி தொடங்கியுள்ளார். ஜனநாயகத்தில் யார் வேண்டுமென்றாலும் கட்சி தொடங்கட்டும். அடுத்தடுத்த கட்டங்களில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். திராவிட சித்தாந்தம் என்று சொன்னால் அ.தி.மு.க, தி.மு.க என்ற ரீதியில் தான் மக்கள் பார்ப்பார்கள். அந்த வகையில் அடுத்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தேர்தலுக்குப் பிறகுதான் முழுமையாக தெரியும். வரும் 2026 – ல் தி.மு.க கூட்டணியை நிச்சயமாக சமாளிப்போம். அ.தி.மு.க வெற்றி பெறும்.” என்றார்.