நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கை..
சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வந்த வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ல் தொடர் போராட்டத்தை மேற்கொண்டனர் தூத்துக்குடி மக்கள். மே 22-ம் தேதி 100வது நாள் போராட்டத்தன்று போராடியவர்களில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மே 26-ல் ஆலை சீல் வைத்து மூடப்பட்டது. அ.தி.மு.க ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டதால் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்திட, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. விசாரணை ஆணையத்தின் முழுமையான விசாரணை அறிக்கை கடந்த 2022, மே 18-ம் தேதி முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதில், “யாருடைய உத்தரவும், தூண்டுதலுமின்றி துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. தமிழ்நாடு இதுவரையிலும் கண்டிராத மிக மோசமான காவல்துறை நடவடிக்கைகளில் ஒன்று. அப்போது பொறுப்பு வகித்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், தென் மண்டல ஐ.ஜி சைலேஷ்குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி கபில்குமார் சரட்கார், தூத்துக்குடி எஸ்.பி. மகேந்திரன், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட 17 பேர்தான் இதற்கு முழுப்பொறுப்பு. குருவிகள் சுடப்படுவதைப் போல மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி
கடந்த 19.10.22-ல் நடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் துப்பாக்கிச்சூடு தொடர்பான ஆணையத்தின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. இருப்பினும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இதுவரை அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஸ்டெர்லைட் படுகொலையின் நீதிக்கான பேரமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காந்திமதிநாதனிடம் பேசினோம், “கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது தூத்துக்குடி வந்த முதல்வர் ஸ்டாலின், ‘அ.தி.மு.கவும், பா.ஜ.கவும் கூட்டு நேர்ந்து நடத்திய பச்சை படுகொலைதான் துப்பாக்கிச்சூடு சம்பவம். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறப்புச்சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றிட நடவடிக்கை எடுப்போம். துப்பாக்கிச்சூடு படுகொலைக்கு காரணமானவர்கள் எவராக இருந்தாலும் எந்த உயர் பதவியில் இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்’ எனப் பேசினார்.
முதல்வர் தயங்குவது ஏன்?
தேர்தல் பிரசாரத்தில் பேசியது ஓட்டுக்கான வெறும் பேச்சுதானா? ஒரு நபர் ஆணையத்தின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட காவல்துறையினரை அடையாளம் காட்டியும் அரசு அதனை ஏற்றுக் கொண்ட பிறகும் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் தயங்குவது ஏன்? இதில், தென் மண்டல ஐ.ஜியாக இருந்த சைலேஷ்குமார் யாதவ்விற்கு டி.ஜி.பியாக பதவி உயர்வு கொடுக்கப்பட்டதுதான் வேதனையின் உச்சம்.
ஆனால், தற்போது துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்ட 3 வருவாய்த்துறை அலுவலர்களில் ஒருவரான கண்ணன் என்பவருக்கு துணை வட்டாட்ச்சியர் பதவியில் இருந்து தற்காலிக வட்டாட்ச்சியராக பதவி உயர்வு அளித்திருப்பது எந்த வகையில் நியாயம்? தற்போது தற்காலிக பணி எனக் குறிப்பிட்டுவிட்டு சில நாள்களில் சத்தமே இல்லாமல் வட்டாட்ச்சியராக பணியில் அமர்த்திவிடுவார்கள். குற்றம்சாட்டவர்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவும் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் இப்படி ஒரு பதவி உயர்வை எப்படி அரசு வழங்கியது?” என்றார் கொதிப்புடன்.
`குற்றம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே..’
இதுகுறித்து தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம், “அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கைப்படி குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்த 17 பேர்தான் எனக் கூறியுள்ளார்கள். அந்த அறிக்கையில் குறிப்பிட்டபடி 17 பேரும்அரசு அதிகாரிகளாக இருப்பதால் உடனே குற்றவியல் நடவடிக்கை எடுத்துவிட முடியாது. முதலில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு அதன் பிறகே குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.
தற்போது துறை ரீதியான நடவடிக்கை நடந்து வருகிறது. இதைக் காரணம் காட்டி அரசுப் பணியாளர்களின் பணிப்பாதுக்காப்புச் சட்டத்தின்படி அவர்களுக்கான பதவி உயர்வு உள்ளிட்டவற்றை நிறுத்தி வைக்க முடியாது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அவர்கள் குற்றவாளிகள். அவர்கள் மீது எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளலாம். அதே நேரத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக முதல்வர் கொடுத்த வாக்குறுதிப்படி குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். அதில் மாற்றுக்கருத்து இல்லை.” என்றார்.