இந்த ஆண்டு வருகிற அக்டோபர் 31-ம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. பட்டாசு உற்பத்தியும் முழு வீச்சில் நடந்து கொண்டிருந்த நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் அடுத்தடுத்து நடந்த வெடி விபத்துகளின் எதிரொலியாக,
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுமார் 1,100 பட்டாசு ஆலைகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டு, 300-க்கும் மேற்பட்ட ஆலைகளில் விதிமீறல்கள் உள்ளதாக உரிமம் ரத்து செய்யப்பட்டு , ஆலைகளை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து விருதுநகர் மாவட்ட பட்டாசு- தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பாண்டியனிடம் பேசியபோது, “விதிமீறல்கள் உள்ளதாக எந்த முன்னறிவிப்பும் , எச்சரிக்கையும் இல்லாமல் எங்கள் ஆலைகள் மூடப்படுகிறது. இதனால் கடந்த மூன்று மாதங்களில் அந்த ஆலைகளில் பணிபுரிந்து வந்த சுமார் 25,000 பட்டாசு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இந்தப் பகுதியின் மூலாதார தொழிலான பட்டாசு தொழிலில், சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வந்த எங்கள் பணியாளர்கள், தற்போது வேலையின்மையால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் வேறு மாற்றுத்தொழில்கள் ஏதும் இல்லை; நாங்கள் தீபாவளிக்கு முன் இந்த இரண்டு மாத வருமானத்தையே எங்கள் தேவைகளுக்கு பெரிதும் நம்பி இருக்கிறோம்.
ஆலைகள் மூடல், உற்பத்தி குறைப்பு போன்றவற்றால், நிலையான வருமானமின்றி எங்கள் தொழிலாளர்கள் அன்றாட அடிப்படை தேவைகளுக்கே அல்லல்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு, அரசு அதிகாரிகள் இத்தகைய நடவடிக்கைகளை எடுப்பது உயிரிழப்புகளை தடுப்பதாக இருந்தாலும், அங்கே அன்றாட கூலிகளாக பணிபுரியக்கூடிய மக்களின் நிலையான வருமானத்தையும், வாழ்வாதாரத்தையும், உறுதி செய்வதும் அரசின் கடமையாகும்.
எனவே தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் , பாதுகாப்பான முறையில் தொழிற்சாலைகளை இயக்க வேண்டும், வேலை இழந்துள்ள எங்கள் தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அல்லது இப்பகுதி மக்களுக்கு மாற்றுத் தொழில்கள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை எங்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், துறை அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார் ஆதங்கமாக.
பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்தி, ஒரு நாள் திருநாளை நம்பி வருடம் முழுவதும் உழைக்கும் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் துரித கதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது!