உத்தவ், ஆதித்யாவை தொடர்ந்து அமித்; தாக்கரே குடும்பத்திலிருந்து மேலும் ஒருவர் தேர்தலில் போட்டி!

மகாராஷ்டிராவில் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே உயிரோடு இருந்த வரை அவரது குடும்பத்தைச் சேர்ந்த யாரும் தேர்தலில் போட்டியிட்டதில்லை. அதோடு அரசு பணிக்கும் வந்ததில்லை. 1995-ம் ஆண்டு சிவசேனா-பா.ஜ.க கூட்டணி ஆட்சிக்கு வந்த போது முதல்வர் பதவியை சிவசேனா மூத்த தலைவர் மனோகர் ஜோஷிக்கு கொடுத்தார். ஆனால் பால் தாக்கரே மறைந்த பிறகு நிலைமை அடியோடு மாறியது. சிவசேனா இரண்டாக உடைந்தது. அதோடு உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே தேர்தலில் போட்டியிட்டார். 2019-ம் ஆண்டு திடீர் முதல்வரான உத்தவ் தாக்கரேயும் சட்டமேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் சிவசேனாவில் இருந்து பிரிந்த உத்தவ் தாக்கரே சித்தப்பா மகன் ராஜ் தாக்கரே இது வரை தேர்தலில் போட்டியிடவில்லை. தற்போது மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது.

இத்தேர்தலில் பா.ஜ.க-வோடு கூட்டணி அமைத்து போட்டியிட ராஜ் தாக்கரேயின் நவநிர்மாண் சேனா விரும்பியது. ஆனால் பா.ஜ.க கூட்டணியில் ஏற்கெனவே மூன்று கட்சிகள் இருப்பதால் ராஜ் தாக்கரே கட்சியை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் பா.ஜ.க இல்லை. இதையடுத்து தனித்து போட்டியிட ராஜ் தாக்கரே கட்சி முடிவு செய்துள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ராஜ் தாக்கரே மகன் அமித் தாக்கரே கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக அமித் தாக்கரே தெரிவித்தார். அதோடு கட்சித்தலைவர்கள் அனைவரும் தேர்தலில் போட்டியிடவேண்டும் என்றும், தானும் கட்சி சொல்லும் தொகுதியில் போட்டியிட தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டம் கட்சியின் மூத்த தலைவர் பாலா நந்த்காவ்கர் தலைமையில் நடந்தது. ராஜ் தாக்கரே பங்கேற்கவில்லை. அமித் தாக்கரேயின் விருப்பத்தைத் தொடர்ந்து அவரை வரும் சட்டமன்றத் தேர்தலில் மும்பையில் உள்ள மாகிம், பாண்டூப், மகதானே ஆகியவற்றில் ஏதாவது ஒரு தொகுதியில் நிறுத்த நவநிர்மாண் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பாலா நந்த்காவ்கர் அளித்த பேட்டியில், ”அமித் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். கட்சி சம்மதித்தால் அவர் போட்டியிட தயாராக இருக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஒரு ஆலோசனைக்கூட்டம் நடக்க இருக்கிறது. அதில் இது குறித்து விவாதிக்கப்படும்” என்றார்.

பால் தாக்கரேயின் மூத்த மகன் பிந்துமாதவ் தாக்கரே மகன் நிஹர் தாக்கரேயும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான ஹர்ஷ்வர்தன் பாட்டீல் மருமகனான நிர்ஹர் தாக்கரே வழக்கறிஞராக இருக்கிறார். அவர் பா.ஜ.க சார்பாக போட்டியிட இருக்கிறார்.