One Nation One Election: ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஒப்புதலளித்த மோடி 3.0 அமைச்சரவை… விரைவில் மசோதா!

மத்தியில் ஆளும் பா.ஜ.க-வின் முக்கிய கனவுத் திட்டங்களில் ஒன்று, `ஒரே நாடு ஒரே தேர்தல் (One Nation One Election)’. நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தேர்தல் செலவைக் குறைக்கும் என்றும், நிர்வாகத்திறனை மேம்படுத்தும் என்றும் பா.ஜ.க கூறிவருகிறது. மறுபக்கம், பல மாநிலங்கள் ஒன்றிணைந்த இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு ஒத்துவராத மற்றும் மாநில நலன்களுக்கு எதிரான திட்டம் என்று எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன.

ஒரே நாடு ஒரே தேர்தல்

இவ்வாறான சூழலுக்கு மத்தியில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே இந்தத் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.பி-க்கள் அடங்கிய சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது.

ராம்நாத் கோவிந்த் குழு – குடியரசுத் தலைவர்

அந்தக் குழுவும் தேர்தலுக்கு முன்பாகவே, 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், `முதற்கட்டமாக மக்களவை மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல். இதற்கான சட்ட திருத்தத்துக்கு மாநில அரசுகளின் ஒப்புதல் தேவையில்லை. இரண்டாம் கட்டமாக நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளுக்கு 100 நாள்களுக்குள் தேர்தல். இவையனைத்துக்கும் பொதுவான வாக்காளர் அட்டை” உள்ளிட்ட பலவற்றைக் குழு பரிந்துரை செய்தது. அதன்பிறகு, நாடாளுமன்றத் தேர்தல் வேலைகள் தீவிரமாக நடைபெற்றதால் அந்த அறிக்கை அப்படியே கிடந்தது.

பின்னர், நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையை இழந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி தலைமையில் ஆட்சியமைத்தது. தற்போது, மோடி 3.0 அரசு 100 நாள்களையும் கடந்துவிட்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் விரைவில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று உறுதியாகக் கூறிவந்தார். இந்த நிலையில், ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்திருக்கிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல்

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருக்கும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “ஒரே நாடு ஒரே தேர்தல் இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்துக்கு ஏராளமான கட்சிகளின் ஆதரவு கிடைத்திருக்கிறது. அனைத்து தேர்தல்களுக்கும் பொதுவான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். ராம்நாத் கோவிந்த் குழுவின் பரிந்துரைகளை முன்னெடுப்பதற்கு ஒரு அமலாக்கக் குழு அமைக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார். மேலும், வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக மசோதா தாக்கல் செய்யப்படவிருப்பதாகவும் கூறப்படுகிறது.