ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பனப்பாக்கம் புதிய சிப்காட் தொழிற்பேட்டையில், `டாடா’ மோட்டார்ஸ் குழுமம் சார்பாக ரூ.9,000 கோடி முதலீட்டில் கார் உற்பத்தி தொழிற்சாலை அமையவிருக்கிறது. சுமார் 470 ஏக்கர் பரப்பளவில் இந்தத் தொழிற்சாலையை அமைக்கத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஐந்து ஆண்டுகளில், ஐந்தாயிரம் பேருக்கு வேலை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், தமிழக அரசுடன் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது டாடா நிறுவனம். ஒப்பந்தத்தை தமிழக வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண் இயக்குநரும், டாடா மோட்டார்ஸ் குழுமத் தலைமை நிதி அலுவலரும் பரிமாறிக் கொண்டார்கள்.
தொழிற்சாலை அமைக்கப்பட்ட பிறகு `நான் முதல்வன்’ திட்டத்தோடு இணைந்து, அதிக அளவிலான பெண்களையும் வேலைக்கு எடுப்பதாக உத்தரவாதம் கொடுத்திருக்கிறது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். புதிதாகத் தொடங்கப்படவுள்ள இந்தத் தொழிற்சாலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும், அதன் சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனமும் இணைந்து எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஆலையின் உற்பத்தி திறன் ஆண்டுக்கு இரண்டு லட்சம் கார்களாக இருக்கும் எனவும், அதில் மூன்றில் ஒருப் பகுதி ஜாகுவார் லேண்ட் ரோவர் மின்சார கார்களாக இருக்கும் எனவும் தகவல்கள் வருகின்றன. இதுபோக, மின்சார கார் உற்பத்திக்கான உதிரிபாகத் தொழிற்சாலைகளும் இந்த பகுதியில் உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில்தான் `டாடா’ வாகன உற்பத்தி தொழிற்சாலைக்கு வருகிற 28-ம் தேதி நேரில் வந்து அடிக்கல் நட்டு, கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மேலும், இதே பகுதியில் ரூ.400 கோடியில் அமையவுள்ள காலணி பூங்காவுக்கும் முதலமைச்சர் அன்றைய தினமே அடிக்கல் நாட்டுகிறார். இந்த காலணி பூங்கா மூலமாக இருபதாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவிருக்கிறது. இதனிடையே, முதலமைச்சரின் வருகையையொட்டி, கைத்தறித்துறை அமைச்சர் காந்தி முன்னேற்பாடுப் பணிகளை கவனித்து வருகிறார். சிப்காட் நுழைவு வாயில் முதற்கொண்டு டாடா தொழில் நிறுவனம் அமையவுள்ள இடம் வரையிலும் நெடுஞ்சாலைத்துறை மூலமாக சாலை அமைக்கும் பணிகளும் விரைவாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு தொழில்துறை மேற்கொண்டு வருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY