`மது ஒழிப்பு மாநாடு யார் நடத்தினாலும் நாங்கள் ஆதரிப்போம்; ஆனால் திருமாவளவன் எங்களை…’ – அன்புமணி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரனின் புதுமனைப் புது விழாவில், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பாட்டாளி மக்கள் கட்சி கொடியை ஏற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், ”தமிழக முதல்வர் 17 நாள்கள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து, வெறும் ரூ.7,500 கோடி முதலீடு பெற்று வந்துள்ளார். அது முதலீடு கிடையாது. புரிந்துணர்வு ஒப்பந்தம். அதில் முதலீடு வருமா என்பது தெரியாது. முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. அதன் பின்னர் முதல்வர் ஸ்பெயின், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றார்.

அன்புமணி ராமதாஸ்

கடந்த 5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி புரிந்துரை ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த 10 லட்சம் கோடியில் முதலீடு என்ற பார்த்தால் வெறும் ரூ.87 ஆயிரம் கோடிதான். இது வெளிநாட்டு, உள்நாட்டு முதலீடு சேர்த்துதான். இது வெறும் 9 சதவீதம் தான். அப்படியென்றால், முதல்வர் அமெரிக்கா சென்றதில் 10 சதவீதம்தான் எதிர்பார்க்க வேண்டும். அதாவது, ரூ.750 கோடிதான். நிச்சயமாக முதல்வரின் இந்த பயணத்தை நான் தோல்வியாகத்தான் பார்க்கிறேன். மற்ற மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் வெளிநாடு சென்றால், ரூ.50 ஆயிரம் கோடி, ரூ.80 ஆயிரம் கோடி என வாங்கி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புகளில் இருந்து இன்னும் மீளவில்லை. ஏனென்றால், விவசாயிகளுக்கு நிவாரணம் சரியாகப் போய்ச் சேரவில்லை. சாலைகள் இன்னும் மோசமான நிலையில்தான் இருக்கிறது. மது ஒழிப்பு என்று சொன்னாலே தமிழ்நாட்டு அரசியலில் ஒரே கட்சி பா.ம.க-தான். பா.ம.க நிறுவனர் ராமதாஸ்  கடந்த 45 ஆண்டுகளாகப் போராடி வருகிறார். எங்கள் கட்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே மது ஒழிப்புக்காக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. மதுவை எதிர்த்து போராடி பா.ம.க-வில் இதுவரை 15 ஆயிரம் பெண்கள் சிறை சென்றுள்ளனர்.

அன்புமணி ராமதாஸ்

அனைத்து கட்சிகளும் மது ஒழிப்பை கொள்கை ரீதியாக ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் பா.ம.க-தான். கடந்த ஆட்சி காலத்தில் கூட்டணியில் இருந்துபோது, நாங்கள் நிபந்தனையாக வைத்ததால் தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. டாஸ்மாக் கடைகளை மூடினால் நிலைமை வேறுவிதமாக மாறிவிடும் என இப்போது அமைச்சர் கூறுகிறார். திராவிட மாடல் என்றால் தமிழ்நாட்டு இளைஞர்கள் மது இல்லாமல் இருக்க முடியாது என்ற சூழலை கொண்டு வருவதுதான்.

அரசுக்கு வருவாய் என்று மட்டும் பார்க்காமல், மக்களின் உடல்நலம், வளர்ச்சி, குடும்பம், மகிழ்ச்சி, சமூக பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்னை என இவை அனைத்தையும் பார்த்து தமிழக முதல்வர் ஒரு முடிவு எடுக்க வேண்டும். ஒரே நாளில் மூட வேண்டும் என்று அவசியம் கிடையாது. இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் எத்தனை கடைகளை மூடப்போகிறீர்கள் என்று சொல்லுங்கள். அதனை செயல்படுத்துங்கள். மது ஒழிப்பு மாநாடு, போராட்டம், கூட்டம் யார் நடத்தினாலும் நாங்கள் ஆதரிப்போம்.

அன்புமணி ராமதாஸ்

இது எங்களது கட்சியின் மையக் கொள்கை. ஆனால், எங்களை சாதி கட்சி என்று இழிவுபடுத்த வேண்டாம். அப்படியென்றால் நீங்கள் என்ன கட்சி. எங்கள் கட்சியை கொச்சைப்படுத்துவதை திருமாவளவன் நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.  2026 சட்டமன்றத் தேர்தல் மட்டும் கிடையாது. அடுத்து வரும் தேர்தல்களிலும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும். மக்கள் பிரச்னைகளை முன்வைத்து அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம். வரும்  2026-ல் மீண்டும் தி.மு.க ஆட்சி வராது. தி.மு.க மீது மக்கள் எதிர்ப்பு உள்ளது. ஏதோ விளம்பரம் செய்து கொண்டுள்ளனர்.” என்றார்.